Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போயஸ் கார்டன் பக்கம் வரக்கூடாது!' - தீபாவை எச்சரிக்கும் உளவுத்துறை #VikatanExclusive

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் வீட்டை தீபா முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை முதல்வர் அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவிடமாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதுதொடர்பான பணிகளை வருவாய்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்கக்கூடாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டரீதியாக போராடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் போயஸ் கார்டன் வீட்டை தீபா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிடப் போவதாகத் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அதுதொடர்பான ரிப்போர்ட் முதல்வர் அலுவலகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் போயஸ் கார்டன் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு போட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. போயஸ் கார்டன் குறித்து தீபா எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளை, உளவுத்துறை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. போயஸ் கார்டன் வீட்டை தீபா, முற்றுகையிட்டால் அவரைக் கைதுசெய்யவும் கிரீன் சிக்னல் முதல்வர் அலுவலகத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாம். 
  
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. ஜெ. தீபா அணி செய்தி தொடர்பாளர் செல்ல ராஜாமணி, "போயஸ் கார்டன் வீட்டின் வாரிசான தீபாவிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் அதை நினைவிடமாக்குவது பழிவாங்கும் நடவடிக்கை. போயஸ் கார்டன் வீட்டுக்குள் தீபா நுழைந்துவிட்டால் மீண்டும் ஒரு ஜெயலலிதா உருவாகிவிடுவார் என்ற அச்சத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர். போயஸ் கார்டன் விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராகிவிட்டோம். இன்னும் 10 தினங்களுக்குள் போயஸ் கார்டன் வீட்டை தீபாவின் தலைமையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் முற்றுகையிடவும் தயாராக உள்ளோம். அப்போது எங்களைக் கைதுசெய்தாலும் அதை எதிர்கொள்வோம். கைதுக்குப்பயந்து போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க மாட்டோம். வீட்டின் உரிமையாளரை நுழைய விடாமல் தடுக்க போலீஸாருக்கு அதிகாரமில்லை.

ஜெயலலிதா, தீபா, தீபக்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தீபா பங்கேற்க வாய்ப்புள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. 
தற்போது அ.தி.மு.க-வில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்கும்போது கேலிக்கூத்தாக உள்ளது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை அ.தி.மு.க-வில் உள்ளது. துணைப் பொதுச் செயலாளர் என்றுக்கூறிக் கொண்டு தினகரன், கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கிறார், நீக்குகிறார். அதற்கு சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். தமிழக மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஏமாற்றுகின்றனர். ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பதவியிலிருந்து விலகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சசிகலா குடும்பத்தினரையும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியில் வரும்.  பன்னீர்செல்வத்தை திருப்திப்படுத்தவும் அணிகளை இணைத்து ஆட்சியையும், பதவியையும் காப்பாற்றிக் கொள்ளவும் விசாரணை கமிஷன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ-க்களின் பெருபான்மையை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, பதவி விலக வேண்டும். ஆட்சியே தள்ளாட்டத்திலிருக்கும்போது போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்குவது என்ற கொள்கை முடிவை எடுக்கமுடியாது.  " என்றார்.

உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், போயஸ் கார்டன் வீடு நினைவிடமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்த தனியார் காவலாளிகள் விலக்கப்பட்டுள்ளனர். அந்த வீட்டுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் போடப்பட்டுள்ளது. நினைவிடமாக்கக் கூடாது என்று தீபா தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சட்டரீதியாக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தபோதுதான் போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிடும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. இன்னும் ஒருவாரக்காலத்துக்குள் தீபா, போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிடப்போவதாக எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிடும் தீபா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்படுவார்கள்" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement