Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இலங்கையில் நடப்பது இங்கு நடக்கக் கூடாதா?' - தவிப்பில் தாதுமணல் அதிபர்கள்

  தாது மணல்

இலங்கை, ஆஸ்திரேலியாவில் தாது மணல் பிசினஸ் நடந்துவரும்போது தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தாது மணல் தொழில் அதிபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் முறையான அனுமதிகள் இருந்தாலும் தமிழகத்தில் அரசியல் ரீதியான சில காரணங்களால் தாது மணல் பிசினஸ் முடங்கியுள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், தாதுமணல் பிசினஸுக்கு உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க நீதிமன்றங்கள் மூலமாகவும் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தாது மணல் பிசினஸால் கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அரசுக்குப் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டன. தாது மணல் பிசினஸ் மூலம் தனிநபர்களே கொள்ளை லாபம் அடைந்துவருவதாகவும், இயற்கை வளம் அழிக்கப்பட்டதாகவும் புகார் சொல்லப்பட்டது.
கடந்த 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தாது மணல் தொழில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கடற்கரையில் இருந்து தொழிற்சாலைக்கு மினரலைக் கொண்டு செல்லும் போக்குவரத்துக்குத் திடீரென தற்காலிகத் தடைவிதித்தார். தொடர்ந்து தாது மணல் தொழிலில் உள்ள சாதகப் பாதகங்களைக் கண்டறியும் நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, திருச்சி ஆகிய
5 மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டார். ஆய்வு முடியும் வரை இந்தத் தற்காலிகத் தடை அமலில் இருக்கும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் இறுதி ஆய்வறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. அதன்பிறகே தாது மணல் விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரியவரும். ஆனால், ஆய்வை இதுவரை முடிக்காமல் இருப்பது ஏன் என்பது அரசு தரப்பிலேயே இன்னமும் விடைதெரியாத மர்மமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து வி.வி.மினரல்ஸ் நிறுவன மேலாளர் அலெக்ஸ் கூறுகையில், "தாது மணல் தொழிலைப் பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமே பாரபட்சம் நீடிக்கிறது. அதாவது, கடற்கரையிலிருந்து தாது மணலை, தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்குத்தான் தற்காலிகத் தடை உள்ளது. தாது மணல் தொடர்பான பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விரிவாகப் பேச முடியாது. இருப்பினும் தாது மணல் பிசினஸ் அரசியல் காரணமாகவே தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது. 

 தாது மணல்

இந்த  உண்மை நிலவரம் தெரியாமல் தவறான தகவல்கள் பரபரப்படுகின்றன. ஆறுகளில் மணல் எடுத்தால் அதுதான் இயற்கை வளத்தை அழிப்பதற்கு சமம். ஆனால், இந்தத் தொழிலை பொறுத்தவரை, அலைகள் மூலம் கடற்கரைக்கு வந்துசேரும் மணலில் இருந்து தாது  பொருள்களைப் பிரித்தெடுத்து நம் நாட்டின் தேவை போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான். மத்திய அரசின் அணுசக்தி துறை நேரடி கட்டுப்பாட்டில் பிரதம அமைச்சரின் கீழ் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (ஐ.ஆர்.இ.எல்) நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு கடற்கரை மணலில் இருந்து மினரல் பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிறுவனம் மூலம் 1963-ம் ஆண்டு முதல் கேரளாவில் தாது மணல் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தாது மணல் பிசினஸ் எந்தவித தடையுமின்றி நடந்துவருகின்றன. ஆனால், தமிழகத்தில் தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின்பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில்  மட்டுமே ககன்தீப்சிங்பேடி ஆய்வு நடத்தினார். திருச்சியில் மட்டும் ஆய்வு நடத்தப்படவில்லை. அவர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தால் இத்தொழிலில் உள்ள முட்டுக்கட்டை நீங்கிவிடும். இதனால்தான் 4 ஆண்டுகளாக ஆய்வு நடந்துவருவதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

தாது மணல் பிசினஸ் மூலம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்துவருகிறது. ஆனால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தடைபட்டுள்ளது. தமிழக கடற்கரைப்பகுதியில் சேரும் தாது மணலுக்கு வெளிநாட்டுச் சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இதனால், வெளிநாட்டு நிறுவனங்களின் சதியும் தடைக்கு ஒரு காரணமாக உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தமிழக கடற்கரைப்பகுதியில் தாது மணல் எடுக்கப்படாததால், அந்த மணல் வேறு பகுதிக்கு கடல் வழியாக இடம்பெயர்ந்து சென்றுவிடும். இதனால் இலங்கை, ஆஸ்திரேலியாவில் தாது மணல் பிசினஸ் ஜோராக நடந்துவருகின்றன. எனவே, தாது மணல் பிசினஸில் உள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அந்நிய செலாவணி, வரியினங்கள், ராயல்டி உள்ளிட்டவை மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அதோடு தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement