மேலும் 3 அமைச்சர்களின் பதவிப் பறிப்பு! அடுத்தடுத்து அதிரடிகாட்டும் தினகரன்!

அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், கே.சி.வீரமணி ஆகியோரிடமிருந்த மாவட்ட செயலாளர்கள் பொறுப்பை அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பறித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு முதல்வர் பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று முன்தினம் இணைந்தது. இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். தினகரனின் இந்த நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது. அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் தினகரன். அதோடு விட்டுவிடாமல் பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜியை நியமித்துள்ளார் தினகரன். திருவாரூர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு, புதிய செயலாளராக எஸ்.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணியை நீக்கிவிட்டு, புதிய செயலாளராக எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியத்தை நியமித்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஏழுமலை எம்.எல்.ஏ-யும், தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ செந்தமிழனும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த வைரமுத்து நீக்கப்பட்டு, புதிய செயலாளராக பரணி கார்த்திகேயனும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ கோதண்டபாணியும், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் நீக்கப்பட்டு, கல்லூர் வேலாயுதத்தையும் நியமித்துள்ளார் தினகரன்.

அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களின் பதவிகளை தினகரன் பறித்துவருவது கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!