சிறுநீர் கழிக்க பெண்கள் தமிழக-கேரள எல்லையைத் தாண்ட வேண்டும்! - இது தமிழக அவலம்

சபரிமலை, தேக்கடி இவற்றில் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் தேனி மாவட்டம் கூடலூர் வழியாகக் குமுளியைக் கடந்துதான் செல்ல வேண்டும். சுற்றுலா வாகனங்கள் முதல் தமிழக - கேரள எல்லையில் இருக்கும் காபி, ஏலம் தோட்டங்களுக்குச் செல்பவர்கள், காய்கறி - பழங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என தினமும் நான்காயிரம் வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய பிரதான பாதை கூடலூர் – குமுளி சாலை. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் இந்த முக்கியப் பாதையின் நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது!

தமிழகம் கேரளா எல்லை

மறைந்துவிட்ட அறிவிப்புப் பலகைகள்:

லோயர்கேம்பில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணம் செய்து குமுளி அடைய வேண்டும். இந்த மலைப்பாதையில் பல வளைவுகளும், சில கொண்டை ஊசி வளைவுகளும் இருக்கின்றன. வளைவுகள் வர இருக்கின்றன என்று முன்னரே அறிவிக்கும் அறிவிப்புப் பலகையைச் செடிகொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்திருக்கின்றன. இதனால் வர இருப்பது எப்படிப்பட்ட வளைவு என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில விபத்துகளும்கூட நடக்கின்றன.

கடுமையான போக்குவரத்து நெரிசல்!

தமிழக - கேரள எல்லையில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் பலநாள் கோரிக்கை. எல்லையின் கேரளப் பகுதியில் அழகான, அடிப்படைவசதிகள் அனைத்தும் இருக்கக்கூடிய பேருந்து நிலையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. அதேபோல், தமிழக எல்லையில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தினமும் தமிழக எல்லைக்குச் சுமார் 40 அரசுப் பேருந்துகள் வந்துசெல்கின்றன. அவை மட்டுமல்லாமல், சுற்றுலாவுக்காக வரக்கூடிய பேருந்துகள், கார்கள் என தமிழக எல்லையில் சாலையோரத்தில் வரிசையாக நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 

பேருந்துகளைத் திருப்புவதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். அங்கே தமிழகப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பணிமனை ஒன்று முன்னர் செயல்பட்டுவந்தது. அதை மலையைவிட்டுக் கீழிறக்கி லோயர்கேம்ப் என்ற இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் போக்குவரத்துத் துறையினர். அதற்கு வனத்துறையும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஓர் ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட அந்தப் பணிமனை, தற்போது எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருக்கிறது. அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தனர். பலகட்ட முயற்சிகளைக் கூடலூர் நகராட்சியும் முன்னெடுத்தபோதும், வனத்துறை, பேருந்து நிலையம் அமைக்க முட்டுக்கட்டைப் போடுவதாகச் சொல்லப்படுகிறது

எல்லை தாண்டி சிறுநீர் கழிக்கும் அவலநிலை:

பேருந்து நிலையம்தான் இல்லை என்றால், சிறுநீர் கழிக்கக்கூடக் கழிப்பிட வசதி தமிழக எல்லையில் இல்லை. இதனால், சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் வாகனங்களுக்குப் பின்னால் சென்று ஆண்கள் சிறுநீர் கழிப்பதால், அப்பகுதியே சுகாதாரச் சீர்கேடு நிறைந்த இடமாக மாறிவிட்டது. கழிப்பிடம் இல்லாததால் பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குச் சென்று, அங்கிருக்கும் பேருந்து நிலைய கழிப்பறையிலோ அல்லது ஹோட்டல்களிலோதான் சிறுநீர் கழிக்கும் அவல நிலை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!