Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”அழகான செவ்வந்திப்பூன்னா அது கூடலூர் தான்..!” - மழையால் மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்று கூடலூர். இங்கே மிகப்பெரிய பரப்பளவில் செவ்வந்திப்பூக்கள் சாகுபடி செய்யப்படும். கழுதைமேடு, காஞ்சிமரத்துறை, ஊமையந்தொழு ஆகிய பகுதிகளில் இருந்து தான் கம்பம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு பூக்கள் செல்லும். ஆடி மாதம் தொடங்கிவிட்டால் இப்பகுதி பூக்களால் நிறைந்துவிடும். ஆனால், கடந்த வருடம் பருவமழை பொய்த்துப்போனதால் பூக்கள் சாகுபடி வெகுவாக குறைந்ததுவிட்டது. இந்நிலையில், தென் மேற்குப் பருவமழை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆரம்பித்துள்ளதால், மீண்டும் செவ்வந்திப்பூ சாகுபடியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

மலர் செவ்வந்தி

பல வருடங்களாக கூடலூர் பகுதியில் செவ்வந்திபூ சாகுபடி செய்யும் விவசாயி, பேயத்தேவரிடம் பேசினோம், ``கடந்த வருடம் மழை இல்லாததால் மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், தற்போது மழை பெய்துவருவதால் செவ்வந்திப் பூக்கள் சாகுபடி செய்திருக்கிறோம். இதில் மரபணு மாற்றப்பட்ட கூட்டுப்பூக்களும் இருக்கிறது, நாட்டு ரகமும் இருக்கிறது. இரண்டிற்கும் ஒரே விலை தான். கூட்டுப்பூக்கள் எடை அதிகமாக இருக்கும். அதனால் நல்ல லாபம் கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகைக்காக தற்போது பயிர் செய்திருக்கிறோம். இந்தப் பூக்கள் எல்லாம் கேரளாவிற்கு செல்கிறது. சாதாரண நாள்களில் கிலோ 150 ரூபாய் வரை விலைபோகும். இது போன்ற விசேஷ நாள்களில் கிலோ 300 முதல் 400 ரூபாய் வரை விலை கிடைக்கும். கேரளாவைச் சேர்ந்த சில பூ வியாபாரிகள், எங்களை நேரடியாகவே சந்தித்து, இந்தத் தேதிக்கு, இவ்வளவு கிலோ பூக்கள் வேண்டும் என்று கேட்பார்கள். கையில் முன் பணமும் கொடுப்பார்கள். அவர்கள் சொன்ன தேதிக்கு ஏற்றபடி விதைத்து பூக்களை கொடுப்போம். மதுரை மற்றும் கம்பத்தில் இருக்கும் வியாபாரிகளும் இதே போல முன்பணம் கொடுத்து, எத்தனை கிலோ வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கும் பூக்களை அனுப்பிவிடுவோம். இதெல்லாம் அக்டோபர் மாதம் வரும் விஜயதசமி, ஆயுதபூஜை வரை தான். ஏனென்றால் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை விசேஷங்கள் அதிகம். எனவே அந்தந்த பண்டிகைக்கு ஏற்றபடி நாங்களும் சரியாக விதைத்து பூக்களை கொடுப்போம். இந்த சீசன் முடிந்தது என்றால் அடுத்து தை தான். அதுவரை மிளகாய் பயிர்செய்வோம். கூடலூர் பூ என்றால் அதற்கு தனி ரேட் இருக்கிறது. தரமான, நல்ல நிறத்தில் செவ்வந்திப்பூக்களை நீங்கள் பார்த்தால் அது கூடலூர் பூவாகத்தான் இருக்கும்`` என்றார்.

செவ்வந்தி

”பூக்களை மதுரை பூ மார்கெட்டிற்குத் தான் கொண்டு செல்ல வேண்டுமா? நீங்களே கேரளாவிற்கு அனுப்பிவிடலாமே?” என்று கேட்டோம்.

”கேரளாவில் இருந்து நேரடியாக எங்களிடம் வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவு. அவர்கள் மதுரை பூ மார்கெட்டிற்கு தான் செல்வார்கள். அதுவும் இந்த ஓணம் சீசனுக்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே மதுரை மார்கெட்டிற்கு சென்று முன்பணம் கொடுத்துவிடுவார்கள். எனவே அந்த மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகள் எங்களிடம் வந்து பூக்களை வாங்கி, கேரளாவிற்கு அனுப்புவார்கள். கூடலூரில் இருந்து கேரளாவிற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம். இந்தப் பகுதியில் விளையும் காய்கறி முதல் பூக்கள் வரை அனைத்தும் கம்பம், மதுரை மார்கெட்டிற்கு சென்ற பிறகுதான் கேரளாவிற்குச் செல்லும். இதனை மாற்றும் விதமாக, கூடலூரிலேயே ஒரு பெரிய மார்க்கெட் அமைக்கும் திட்டம் இருக்கிறது. அந்த மார்கெட் வந்துவிட்டால், கேரள வியாபாரிகள் அனைவரும் நேரடியாக எங்களை அணுகி பூக்களை வாங்கிக்கொள்வார்கள். மதுரை போக வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. மேலும் கமிஷன் பிரச்சனையும் இருக்காது. பூக்களுக்கான சரியான விலை கிடைக்கும்.`` என்றார் நிறைவாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement