அணி மாறுவாரா ஓ.எஸ்.மணியன்?

ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களில் எங்களுக்காக வேலைசெய்யும் ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள் என்று தினகரன் கூறியதும், அந்த ஸ்லீப்பர்செல்கள் யார், யார் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அலசஆரம்பித்துவிட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா நீக்கப்படுவதற்குபதிலாக தேர்வுசெய்யப்படலாம் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் சொன்னதும், ஓ.எஸ். மணியன் அணிமாறப்போகிறார் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.  

ஓ.எஸ். மணியன் அணிமாறுவாரா? அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம், சின்னமாவின் பேரன்பை பெற்றவர் அண்ணன். அதேநேரத்தில் திவாகரன், தினகரன் இடையே மோதல் வெடித்த சமயத்தில் திவாரகன் பக்கமே அண்ணன் இருந்தார்.  தினகரனை மேடைபோட்டு தாக்கிப்பேசினார்.  எனவே, எப்போதுமே தினகரனோடு நெருக்கம் கிடையாது.  அண்ணன் திவாகரனிடம், நீங்கள் இருவரும் சண்டைபோடும்போது ஒருநிலை, கூடிக்குலவும்போது ஒருநிலையென என்னால் செயல்பட முடியாது. அம்மா வளர்த்த கட்சிக்கும், அம்மா அமைத்த ஆட்சிக்கும் இடையூராக எந்தச் செயலையும் செய்யமாட்டேன்| என்று கூறிவிட்டார்.  

அத்துடன், எடப்பாடி தலைமையிலான அரசு அண்ணன் வைக்கும் எந்தக் கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்றித்தருகிறது. நாகை மாவட்டத்திற்கு சீர்காழி-புத்தூரில் ரூ.8 கோடியில் கலைக்கல்லூரி, வேதாரண்யத்தில் ரூ.68 கோடி மீன்வளக்கல்லூரி, சீர்காழி நகரத்திற்கு ரூ.88 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம். மயிலாடுதுறையில் ரூ.35 கோடியில் புதிய பேருந்துநிலையம் என அண்ணன் கேட்ட அனைத்துத் திட்டத்திற்கும் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து தந்திருக்கிறார். இப்படி மக்கள்நலத் திட்டங்கள் அனைத்தும் தருகிற எடப்பாடி அரசுக்குத்தான் அண்ணன் துணைநிற்பார்.  தினகரன் அணிக்குச் செல்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை.  அண்ணன் மீது பொறாமை கொண்டவர்கள் இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுகிறார்கள் என்றனர்.  

இதுபற்றி ஓ.எஸ். மணியன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது கட்சித்தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கவர்னரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த முரண்பட்ட கருத்துகள் பேசித் தீர்வுகாணப்படும். இரட்டைஇலைச் சின்னத்தில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்யமாட்டார்கள் என நம்புகிறோம். சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ஒருபோதும் எதிரிகளுக்கு இடம்கொடுக்கமாட்டார்கள். பிரிந்துள்ளவர்கள் விரைவில் வந்து இணைவார்கள் என நம்புகிறோம் என்றார்.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!