Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தி நிறுத்தம்...கவலை கொள்ளும் கேரளா அரசு..!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் திறனுடைய இரண்டு அலகுகள் உள்ளன. முதல் அலகு 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டது. பின், இரண்டாவது அணு உலையும் அமைந்தது. இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சர்வதேச அணுசக்தி விதிகளின்படி, பராமரிப்பு பணிகளுக்காக அணு உலை திறக்கப்பட்டால் 65 நாள்களுக்குள் மின் உற்பத்தி தொடங்க வேண்டும். 'கடந்த 4 மாதங்களைக் கடந்தும் முழுமையாக மின் உற்பத்தி தொடங்கப்படாததால், அந்த அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது' என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கூடங்குளம் அணு உலை

இது சம்பந்தமாக சமீபத்தில் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், சுப. உதயகுமார், "ஓர் அணுஉலை பராமரிப்புப் பணிகளுக்காகவோ அல்லது எரிபொருளை நிரப்புவதற்காகவோ மூடப்பட்டால், அதிகபட்சம் இரண்டு மாதத்திற்குள் திறக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விதி. கடந்த 4 மாதங்களாக அணு உலை மூடப்பட்டிருக்கிறது. முதலில் சில காரணங்கள் சொன்னவர்கள், கடைசியாக ரஷ்யாவிலிருந்து உதிரிப் பாகங்கள் வர வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் அணு உலையில் உற்பத்தியை நிறுத்தியிருக்கிறோம் எனக் காரணம் சொல்கிறார்கள்" என்றார்.

அணு உலை பற்றி தொடர்ச்சியாகக் கருத்துகளைத் தெரிவித்து வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பேசும்போது, "32,760 மில்லியன் யூனிட்கள் தயாரிக்க வேண்டிய அணு உலையில் இதுவரை 14,148 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த மின்சார உற்பத்தியானது வெறும் 43 சதவிகிதம் மட்டுமே. 1,000 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட உலையில் வெறும் 43 சதவிகிதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. இதுதவிர, கேரளா கடும் மின் பற்றாக்குறையினால் சிக்கித் தவிப்பதாக சில நாள்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. சுமார் 400 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து 266 மெகாவாட் மின்சாரம் வந்திருக்க வேண்டும், ஆனால், கடந்த சில மாதங்களாகக் கூடங்குளம் செயல்படாத காரணத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில மின் துறையிலிருந்து அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டபோது, செப்டம்பர் இறுதியில்தான் படிப்படியாக மின்சாரம் உற்பத்தியாகும்' என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கேரளா வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இங்குதான் சில கேள்விகள் தோன்றுகின்றன" என்றவர் தொடர்ந்தார்.

”கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கப்படும் முன்னர், முதலில் கேரளாவில் உள்ள பெரிங்காமே என்ற இடத்தில்தான் அமையவிருந்தது. அப்பகுதி மக்களின் போராட்டத்தால் திட்டம் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தது. தங்களுக்கு வேண்டாம் என்று சொன்ன மாநிலம், திட்டத்தில் இருந்து மின்சாரத்தை எதிர்பார்க்கிறது. மின்சாரத்தை மட்டும் எதிர்பார்க்கும் அரசு, திட்டத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? அதேபோல கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் கேட்பது கேரளாவின் உரிமைதான் என்றாலும் நமக்கு எது நல்லது இல்லையோ அது மற்றவர்களுக்கும் நல்லது இல்லை என்று நினைப்பதுதானே சரியாக இருக்கும். இங்குத் தயாராகும் மின்சாரத்தில் கேரளாவும், கர்நாடகமும் 50 சதவிகிதம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன. தமிழ்நாட்டுக்கு 45 சதவிகிதம் மின்சாரம் கிடைத்த நிலையில் மின் பற்றாக்குறை நீடிப்பைத் தொடர்ந்து 50 குறைவான மின்சாரமே கிடைக்கும். ஆனால், இத்திட்டத்தைப் பொறுத்தவரையில் 'இறந்து பிறந்த குழந்தை' போலத்தான். அணு உலையால் அதிகம் உபயோகம் கிடையாது. ஆனால், ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் பாதிக்கப்படுவது கேரளாவும் சேர்ந்துதான்" என்றார்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணுஉலைகளும் முழுமையாக உற்பத்தியைத் தொடங்காமல் இருக்கும் நிலையில், இந்திய அணு சக்தி கழகம் மூன்று மற்றும் நான்காம் அணு உலைக்கான கட்டுமானப் பணியைத் தொடங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement