வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (23/08/2017)

கடைசி தொடர்பு:20:06 (23/08/2017)

தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம்..! திவாகரன் அறிவிப்பு

நீட் தேர்வு உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் தங்களின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று சசிகலாவின் சகோதரன் திவாகரன் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாதிட்ட மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் தஞ்சாவூரில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'சபாநாயகர் தனபாலை முதல்வராக ஏற்றுக்கொண்டால் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார். நீட் தேர்வு உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அந்தப் போராட்டத்தில் தங்களின் ஆதரவாளர்கள் பங்கேற்பாளர்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் களைஎடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். சசிகலா மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்பது முன்னரே எதிர்பார்த்தது தான்' என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்தினரை முற்றிலுமாக கட்சியிலிருந்து விலக்கியுள்ளநிலையில், தினகரன் அணியினர் ஆட்சிக்கு எதிராக புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.