வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (23/08/2017)

கடைசி தொடர்பு:21:40 (23/08/2017)

கன்னியாகுமரியில் ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி மாவட்ட ரயில் தடங்களைத் திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து மதுரைக் கோட்டத்தில் இணைக்க வேண்டும் மற்றும் கன்னியாகுமரி - மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்வோர் அமைப்பினர் நாகர்கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையப் பகுதிகள் மேம்பாடு அடையவில்லை. போதிய அளவில் நிதி ஒதுக்கீடுகள், திட்டங்கள் இல்லை. இங்கிருந்து புறப்படுகின்ற, இந்தவழியே செல்கின்ற ரயில்கள் குமரி மாவட்டப் பயணிகளுக்குப் பயன்படுவதாக இல்லை என்றும் நுகர்வோர் அமைப்பினர் குற்றம்சாட்டினர். 

நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம் பிரதானமானதாக இருக்க, ஒதுக்குப்புறத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக முக்கிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இவற்றுக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய ரயில் பாதைகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதுதான் காரணம் என்ற கருத்து உள்ளது. எனவே, குமரி மாவட்டப் பகுதிகளைத் திருவனந்தபுரத்திலிருந்து பிரித்து மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சிகளுக்கும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் 625 கி.மீ ரயில்பாதையும், 108 ரயில்வே ஸ்டேஷன்களையும் உள்ளடக்கியது ஆகும். மேலப்பாளையம் முதல் கேரளாவில் ஷொர்ணூர் வள்ளத்தோள் வரை இக்கோட்டத்தின் கீழ் வருகிறது. நாட்டில் மிகப்பெரிய ரயில்வே கோட்டங்களில் ஒன்றாக 1,356 கி.மீ ரயில்பாதை நீளம் உள்ள மதுரைக் கோட்டத்தில் புதிய மாற்றத்தால் 145 கி.மீ தூரம் சேர்க்கப்படும். 80 கி.மீ தூரம் குறைக்கப்படும். ஆக மொத்தம் 1421 கி.மீ ஆகும். எனவே, இதனைப் பிரித்து நாகர்கோவிலை மையமாக வைத்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ரயில்வே பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய ரயில்வே கோட்டம்  அமைக்கக் கோரி நாகர்கோவிலில் நுகர்வோர் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க