வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (24/08/2017)

கடைசி தொடர்பு:14:26 (04/07/2018)

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கம் இன்று மாலை நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள ஏர்வாடி தர்ஹா மகான் பாதுஷாநாயகத்தின் அடக்க ஸ்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா ஜூலை மாதம் 27-ம் தேதி மவுலீது எனப்படும் புகழ்மாலை ஓதப்பட்டு விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு நடந்தது.

இவ்விழாவின் நிறைவாக கொடி இறக்க விழா இன்று மாலை நடைபெற்றது. கொடி இறக்கத்துக்குப் பின்னர் இவ்விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நெய்ச்சாதம் வழங்கப்பட்டது கொடியிறக்க விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ராமநாதபுரம் தவிர பிற வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் ஏர்வாடிக்கு இயக்கப்பட்டிருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்காவுக்கான நீதிமன்ற ஆணையாளரும், பணி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு தலைமையில் தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.