வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (24/08/2017)

கடைசி தொடர்பு:10:37 (24/08/2017)

டி.டி.வி.தினகரன் உருவப்படம் எரிப்பு! குழம்பிய தொண்டர்கள்

உருவபடம் எரிப்பு

நெல்லையில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரன் உருவப் படத்தை அ.தி.மு,க-வினரே எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுதா.பரமசிவன் கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரால் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர், எடப்பாடி பழனிசாமி அணியில் இடம்பெற்றதுடன், நெல்லை மாவட்டத்தில் உள்ள கட்சியினரையும் எடப்பாடி அணிக்கு ஆதரவாகத் திரட்டினார். இது குறித்த தகவல் அறிந்ததும், டி.டி.வி.தினகரன் இன்று அவரை அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு கல்லூர் வேலாயுதம் என்பவரைப் புதிதாக அந்தப் பொறுப்புக்கு நியமித்தார். 

உருவபடம் எரிப்பு

இதனால் அதிருப்தி அடைந்த சுதா.பரமசிவன் ஆதரவாளர்கள் நெல்லை சந்திப்புப் பகுதியில், தினகரனின் உருவப் படத்தை எரித்தனர். பாளையங்கோட்டை பகுதிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நெல்லை பகுதிச் செயலாளர் சந்திரசேகர், ஜோதி பரமசிவம், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதுபற்றி பேசிய பாளையங்கோட்டை பகுதிச் செயலாளரான கிருஷ்ணமூர்த்தி, ’’கட்சிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால், அவராகவே சிலரை நீக்குவதாக அறிவித்து தனக்கு வேண்டியவர்களைப் புதிதாக நியமிக்கிறார். அவரது இந்த நடவடிக்கையைக் கண்டிக்கவே உருவப் படத்தை எரித்தோம்’’ என்றார். இதில் கலந்துகொண்ட கட்சியினருக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்தக் குழப்பம் தீருவதற்குள் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

உருவபடம் எரிப்பு

’அம்மா வாழ்க’ கோஷத்தை தொண்டர்கள் உற்சாகமாக எழுப்பினார்கள். பின்னர், ’ஓ.பி.எஸ் வாழ்க’ கோஷத்தை எழுப்பினர். அடுத்து ‘எடப்பாடி பழனிசாமி’ பெயரைச் சொன்னதும் அவரை அறிந்துகொள்ளாத தொண்டர்கள் ’ஒழிக’ எனக் கோஷமிட்டனர். உடனே நிர்வாகிகள் கோஷத்தை நிறுத்திவிட்டு தொடர்ந்து, தினகரன் புகைப்படத்தை எரிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

உள்ளூர் பிரச்னைகள் காரணமாகவும், உள்ளூர் கோஷ்டி பூசல்கள் காரணமாகவும் இந்தச் சம்பவத்தில் கட்சியினர் சிலர் ஈடுபட்ட போதிலும், இதில் பங்கேற்ற தொண்டர்களுக்கு இதன் பின்னணி தெரிந்து இருக்கவில்லை. ஆனாலும், கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களால் கவலை அடைந்துள்ள கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின்  நடவடிக்கைகளால் அதிருப்தியுடன் கலைந்துசென்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க