வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (24/08/2017)

கடைசி தொடர்பு:10:34 (24/08/2017)

ஆகஸ்ட் 30 -ம் தேதி வரை முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு

இன்று காலை நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப்பட்டியலை சுகாதாரத் துறை செயலர் ராதகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். வெளியிட்டார். மாலையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம். இந்த அட்டவணையின் அடிப்படையில் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. 

மருத்துவக் கலந்தாய்வு

நாளை (24.08.2017) மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், விளையாட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் 20 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் 60 பேரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

25.08.2017 அன்று பொதுப்பிரிவு கலந்தாய்வில் காலை 9 மணிக்குத் தர வரிசைபட்டியலில் நீட் தேர்வில் 656 மதிப்பெண் முதல் 455 மதிப்பெண் பெற்றவருக்கும் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. காலை 11 மணி அளவில் நீட் தேர்வில் 454 மதிப்பெண் முதல் 402 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கும், மதியம் 2 மணிக்கு 401 மதிப்பெண் முதல் 368 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. 

29.08.2017 அன்று பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த நீட் தேர்வில் 170 மதிப்பெண் வரை பெற்றவர்களுடன் முதல்கட்ட கலந்தாய்வு முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். 30.08.2017 அன்று தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவக் கல்வி  இயக்ககம்.