ஆயிரம் கோடி திட்டத்தை கையாளும் அனுபவம் சுகன்யாவுக்கு இல்லை! கொதிக்கும் வானதி சீனிவாசன்

                                        கோவை ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ நியமனத்தைக் கண்டித்து பி.ஜே.பியினர் ஆர்ப்பாட்டம்


கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ-வாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா நியமிக்கப்பட்டிருப்பது முறைகேடானது. உடனடியாக அந்த நியமனத்தை ரத்துசெய்து தகுதி வாய்ந்த நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவையில் பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், “ஸ்மார்ட் சிட்டி என்பது பிரதமர் மோடியின் கனவுத் திட்டம். முற்றிலும் வளர்ந்த முன்மாதிரி நகரங்களை உருவாக்குவதுதான் ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம். அதற்காக மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை  செலவிட இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் முறைகேடான முறையில் செயல்படுகிறது கோவை மாநகராட்சி. ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரி என்ற பதவி மிக முக்கியமான பதவி. அந்தப் பதவிக்காக மத்திய அரசு வரையறுத்திருந்த தகுதிகளைத் தளர்த்திவிட்டு தங்கள் இஷ்டத்துக்கு சி.இ.ஓ-வை நியமித்திருக்கிறது தமிழக அரசு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.  கோவை ஸ்மார்ட் சிட்டிக்கு அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகள் சுகன்யாவை சி.இ.ஓ-வாக நியமித்திருக்கிறார்கள். ஆயிரம் கோடி திட்டத்தை கையாளும் அனுபவம் சுகன்யாவுக்கு இல்லை. அவரை உடனடியாக நீக்கி முறைப்படி தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் கோவை நிச்சயமாக ஸ்மார்ட் சிட்டியாக மாறாது.

சி.இ.ஓ-வை கார்ப்பரேஷன் கமிஷனர்தான் நேர்முகத்தேர்வை வைத்து தேர்வு செய்திருக்கிறார். இரண்டுமுறை தேர்வு நடத்தியும் இந்த பதவிக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகளோடு சுகன்யாவைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். இது அபத்தமான ஒன்று. எவ்வளவோ திறமையானவர்கள் அனுபவசாலிகள் இங்கு இருக்கிறார்கள். அரசியல்வாதியின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் சுகன்யாவை தேர்வு செய்திருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டிக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படும் பொழுது அந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியைத் தேர்வு செய்வதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தி தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் யாருக்கும் தெரியாததுபோல சின்னதாக கணக்குக்கு ஏதோ ஒன்றிரண்டு பேப்பர்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு காரியம் சாதித்திருக்கிறார்கள். கோவை ஸ்மார்ட் சிட்டிக்கு திறமையான அனுபவம் வாய்ந்த சி.இ.ஓதான் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டம் இங்கு வெற்றிபெரும் இதை நாங்கள் சும்மாவிடப்போவதில்லை. மத்திய அரசிடமும் மாநில அரசின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் பா.ஜ.க சார்பாக கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்றார் ஆவேசமாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!