Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியை திணறடித்த முதல்வர் - துணை முதல்வர் வருகை!

ன்று அரியலூரில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க அணிகள் இணைப்புக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து மேடையேறும் நிகழ்ச்சி என்பதால் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதல்வர் வருகை

இதற்காக இன்று காலை முதலே திருச்சி விமான நிலையத்தில் செண்டை மேளம் முழங்க, தொண்டர்கள் மினி ஆட்டோக்களிலும், லாரிகளிலும் அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வுக்காக திருச்சி முதல் டி.வி.எஸ் டோல்கட் மற்றும் அரியலூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  திருச்சி முதல் அரியலூர் வரை அ.தி.மு.க கொடிகள் தோரணங்கள், கட்-அவுட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சகிதமாக விமானம் மூலம் 11.30 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்தார்கள். திருச்சி விமான நிலையத்தில் வி.ஐ.பி நுழைவாயில் வழியாக முதலில் எடப்பாடி பழனிசாமி வெளியே வர அவருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி-க்கள் குமார், ரத்தினவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அடுத்ததாக ஓ.பி.எஸும் கடைசியாகச் சபாநாயகர் தனபாலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்களிடம் பத்திரிகையாளர்கள் பேட்டியடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பேசவில்லை. இறுதியாக வந்த தனபால், நான் சபாநாயகர் பேட்டி கொடுக்கக் கூடாது என்றபடி எஸ்கேப் ஆனார்.

 

திருச்சியில் விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி-லால்குடி வழியாக அரியலூருக்குச் செல்வதற்காக காரில் கிளம்பினார்.  ஆனால் அவருடன் விமானத்தில் வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வருடன் செல்லாமல், திடீரென திருச்சி சமயபுரத்தை அடுத்த, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வர் கோவிலுக்குப் போவதாக திட்டத்தை மாற்றினார். இந்தத் தலம், 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வந்து பிரம்மபுரீஸ்வரரை பூஜித்தால், பக்தர்களது தலையெழுத்து மாறும்; தலைமுறையும் செழிக்கும் என்பதும், இழந்த ஆற்றல், கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படியான இந்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு திடீரென துணைமுதல்வர் வருகிறார் என்றதும் கோவிலில் பரபரப்பு தொற்றியது. திருப்பட்டூர் செல்லும் வழியான சமயபுரத்திலிருந்தே பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது.

சரியாக 11.50 மணியளவில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, பரஞ்சோதி, மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, பெரம்பலூர் எம்.பி மருதைராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அடுத்து ஓ.பி.எஸ் கோயில் நுழைவாயில் அருகே உள்ள சிவபெருமானை வணங்கியவர், பிரம்மா, பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வணங்கியவருக்குக் கோவிலின் அர்ச்சகர் பாஸ்கர் சுவாமிகள் தலைமையில் ஓ.பி.எஸுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். சுமார் ஒருமணிநேரம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிகளை தரிசித்தவர், சரியாக 12.50க்கு அங்கிருந்து கிளம்பினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி வந்த ஓ.பி.எஸ்ஸை அவரது தொண்டர்கள், மக்கள் முதல்வரே வருக என வரவேற்றனர். இன்று திருச்சிக்கு ஓ.பி.எஸ் துணைமுதல்வராக வந்தபோது ஏகபோகமாகப் பந்தோபஸ்துகள், பாதுகாப்புகள் வழங்கப்பட்டது. அதெல்லாம் சரி! தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓ.பி.எஸ் போன காரணம் என்ன? இழந்த அதிகாரத்தை மீட்கவா? என்று அ.தி.மு.க-வினர் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement