Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி.தினகரன் படத்தை எரித்த தம்பிதுரை ஆதரவாளர்கள்!

                     
 

கரூர் மாவட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆதரவாளர்கள் டி.டி.வி.தினகரன் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க கட்சி, ஆட்சி நிலவரம் நாளுக்கு நாள் பரபரப்பை கிளப்பி வருகிறது. முதல்வர் எடப்பாடி தரப்போடு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு இணைய, அதனால் கடுப்பான டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்களை புதுச்சேரி விண்ட் பிளவர் ரிசார்ட்ஸில் வைத்து, பாதுகாத்து வருகிறார். எந்நேரமும் ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆட்கள் வகிக்கும் கட்சி பொறுப்புகளில் இருந்து அவர்களை விடுவித்து, அந்த பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். அந்த வகையில் சில மாவட்டச் செயலாளர்களை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார்.

அவ்வாறு, இன்று கரூர் மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து, அந்த பொறுப்பில் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வுமான செந்தில்பாலாஜியை நியமிப்பதாக அறிவித்தார். மதியமே இந்த அறிவிப்பு வெளிவந்தது. ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு அமைதி காத்தது. விசாரித்ததில், 'மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தரப்புதான் தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை எந்த ரியாக்ஷனையும் காட்ட வேண்டாம். இப்போ, இருக்கிற சூழலில் நம் மாவட்டத்தில் நீங்கள் டி.டி.விக்கு எதிர்ப்பு தெரிவிக்க போக, அது ஆட்சிக்கே ஆபத்தாகக்கூட முடியும். அதனால், முதல்வரின் கோபத்துக்கு நாம் ஆளாக நேரிடும். அதனால், தலைமை அனுமதி தரும் வரையில் எதுவும் பண்ணாமல் அமைதியாக இருங்கள்' என்று சொன்னதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஏழு மணியளவில் திடீரென தம்பிதுரை ஆதரவாளரான காளியப்பன் தலைமையில், கரூர் பேருந்து நிலையம் அருகே திரண்ட அ.தி.மு.க-வினர், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ''நம்பிக்கை துரோகி டி.டி.வி, மன்னார்குடி கும்பல் ஒழிக' என்று உரக்க கோஷங்கள் எழுப்பினர். அதோடு, கையோடு கொண்டுவந்த  டி.டி.வி.தினகரனின் படங்களை எரித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement