புதிய கட்டடப் பணிகளுக்கு பூமி பூஜை போட்ட அமைச்சர்!

கரூர் நகராட்சியில் ரூ.88 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.10 லட்சம் மதிப்பிலான இரண்டு புதிய கட்டடப் பணிகளுக்கு பூமி பூஜைப் போட்டும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தொடங்கிவைத்தார். அவரோடு, கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா, கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர், "கரூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக நெரூர் தலைமை நீரேற்றம் நிலையத்தில் ரூ 51 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், கரூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். மேலும், கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைமேடு நடுநிலைப் பள்ளி, குமரன் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரூ.36 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 7 ஸ்மார்ட் வகுப்புகளுக்கான வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதை, மாணவர்களும், ஆசிரியர்களும் உரிய முறையில் பயன்படுத்தி, கல்வித் தரத்தில் மேம்பாடு அடைய வேண்டும். மேலும், ஜல்லிவாடனூர், தோரணம்பட்டி ஆகிய இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு சமுதாயக்கூடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அதற்கான, பணிகள் விரைவில் நிறைவுபெற்று அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். தமிழக மக்களின் தேவை அறிந்து செயல்படும் இந்த அரசு, அதற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!