வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (24/08/2017)

கடைசி தொடர்பு:13:04 (10/07/2018)

'சினிமா ஹீரோ ரசிகர்களிடமிருந்து பால் திருடுபோகாமல் பாதுகாப்போம்!'- பால் முகவர்கள் சங்கம் அறிக்கை

'ஒவ்வொரு நடிகரின் படம் வெளியாகும்போதும், நாம் விற்பனைக்கு வைத்திருக்கும் பால் கேன்களை திருடிக்கொண்டு போய், ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்கிறார்கள். பலமுறை அதுபற்றி காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். இன்று அஜித் நடித்த 'விவேகம்' படம் வெளியாகி இருக்கிறது. அதனால், பால் முகவர்கள் ஒருவார காலத்துக்கு கண்விழித்து, பால் கேன்களைத் திருடு போகாமல் பாதுகாக்க வேண்டும்" என்று அதிரடியாக அறிக்கை விட்டிருக்கிறார், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி. 

அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம், வெளியாகின்ற திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கட்- அவுட்களுக்கு, 'பாலாபிஷேகம்' செய்கின்றோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை, அந்த நடிகரின் ரசிகர்கள் வீணாக்குவதை நன்கறிவோம். மேலும், முன்னணி நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக, பால் முகவர்கள் கடைகளுக்கு வெளியே நள்ளிரவில் இறக்கிவைத்திருக்கும் பால் கேன்களைத் திருடிச்சென்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியதும், பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் மற்றும் எங்கள் சங்கத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையும், 'கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் திருடு போனால், நடவடிக்கை எடுக்க இயலாது' என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையும் ஏற்கெனவே பதிவுசெய்திருக்கிறோம். 

இந்தச் சூழலில்தான், தமிழகத்தின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவான 'விவேகம்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. நமது பால் முகவர்களின் பணியானது, பொதுமக்கள் உறங்கும் நேரத்தில் கண்விழித்து, தங்குதடையற்ற சேவையைச் செய்துவரும் பணியாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே, உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி அல்லல்பட்டுவரும் பால் முகவர்கள், பாலை டப்புகளோடு பறிகொடுத்தால், அந்த இழப்பை ஈடுகட்ட பல நாள்கள் ஊதியமின்றி பணியாற்றும் நிலை ஏற்படும். மேலும், அனைத்திற்கும் காவல்துறையை மட்டுமே நம்பிக்கொண்டும், அவர்களை குறை சொல்லிக்கொண்டும் இருப்பதில் அர்த்தமில்லை. எனவே, இன்றிலிருந்து இன்னும் ஒரு வார காலத்துக்கு, தினந்தோறும் இரவு நேரத்தில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, இரவில் சுழற்சி முறையில் பாதிகாப்புப் பணியில் ஈடுபட்டு, தமது வாழ்வாதாரத்தை தற்காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், வந்தபிறகு வருந்துவதைவிட, இழப்பு ஏற்படும் முன் தற்காத்துக்கொள்வதே சாலச்சிறந்தது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.