புதுச்சேரி ரிசார்ட்டில் போர்க்கொடி தூக்கும் அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தினகரன் ஆதரவு இரண்டு பெண் எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்தது. இந்த இணைப்பால் டி.டி.வி.தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது ஒருபுறம் இருக்க, தமிழக அரசியலிலும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும் மனு அளித்து பரபரப்பைக் கூட்டினார்.

புதுச்சேரி

இந்த விவகாரம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கூவத்தூர் பாணியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில்தான் ரிசார்ட்டில் இருக்கும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஸ்வரியும், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபனும் போர்க்கொடி தூக்கியிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகி இருக்கிறது. “கவர்னர் மாளிகையில வாபஸ் மனுவில் கையெழுத்து வாங்கிட்டு அப்படியே அனுப்பிடுவாங்கனு பார்த்தோம். ஆனால் எதுவுமே சொல்லாம நேரா இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. எங்களாள இங்க இருக்க முடியாது. உடனே நாங்க வீட்டுக்குப் போகணும்” என்று பேசினார்களாம், அந்த இரண்டு பெண் எம்.எல்.ஏ-க்களும். அதற்கு மற்ற எம்.எல்.ஏ-க்கள், 'தினகரன் வருவதாக சொல்லியிருக்கிறார். அவர் வந்ததும் இதுபற்றிப் பேசி முடிவெடுக்கலாம்' என்று சமாதானப்படுத்தி வருகிறார்களாம். இது ஒருபுறம் இருக்க ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு, 19 எம்.எல்.ஏ-க்களின் வீடுகளிலும் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டார்கள் என்றும் அதனால்தான் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் முடிவு மாறத் தொடங்கியிருக்கிறது என்றும் பின்னணி பாடுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!