நீட் தேர்வுக்கு எதிராக ஒரே மேடையில் 7 கட்சித் தலைவர்கள் முழக்கம்!

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரி, ஏழு கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டுவருகின்றனர்.

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியது. நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, மத்திய அரசை தமிழக அரசு நாடியது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓராண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு அதை ஏற்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதை வரவேற்ற தமிழக அரசு, உடனடியாக அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்துக்கு, மத்திய அரசின் மூன்று துறைகள் ஒப்புதல் அளித்தன. இதனால், தமிழ்நாடு பாடப் பிரிவில் படித்த மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஒரு மாநிலத்துக்கு என்று நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது' என்று மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு, தமிழகத்தை அதிர்ச்சியடையவைத்தது. இதையடுத்து, நீட் தேர்வுப்படி கலந்தாய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு நேற்று நீட் தேர்வு அடிப்படையில் ரேங்க் பட்டியலை வெளியிட்டது. இன்று காலை முதல் சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, தமிழக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழைத்த துரோகத்தைக் கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 7 கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!