கடந்த ஆண்டு 30, இந்த ஆண்டு 1,300... மருத்துவப் படிப்புக்கு போட்டிபோடும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்! #CBSE #NEET | CBSE students competing for medical studies in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (24/08/2017)

கடைசி தொடர்பு:13:30 (24/08/2017)

கடந்த ஆண்டு 30, இந்த ஆண்டு 1,300... மருத்துவப் படிப்புக்கு போட்டிபோடும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்! #CBSE #NEET

நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்குமான தர வரிசைப்பட்டியலை நேற்று சுகாதார துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். வெளியிட்டார்.  இந்த தரவரிசைப் பட்டியலில் சி.பி.எஸ்.இ (CBSE) மாணவர்கள் ஏராளமானவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. 

CBSE மருத்துவக் கலந்தாய்வு

நீட் தேர்வை தமிழ்நாடு ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு நடக்காது என்று மக்களும் நம்பினர். ஆனால், அவருக்குப் பிறகு சரியான முறையில் எதிர்ப்புக் குரல் கொடுக்காததால் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னையைத் தீர்க்க, தமிழக அரசு சட்டம் இயற்றியதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டவுடனேயே, நீட் தேர்வுக்கான சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால், மத்திய அரசு இதுநாள் வரை ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறது.

இதற்கிடையில், மருத்துவ மாணவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 85% ஒதுக்கீடு, சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15% ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அரசாணையை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை. இந்த அரசாணைக்கு எதிராக நடைபெற்ற வழக்குகளிலும், மேல்முறையீட்டு வழக்குகளிலும் மாநில அரசு தோல்வியைத் தழுவி துவண்ட வேளையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கும்' என்று சொல்ல, தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், செயலரும் டெல்லியில் தவம் கிடந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர், தமிழகத்துக்கு விலக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் கனவைக் கலைத்துவிட்டார். உச்சநீதிமன்றம், உடனே நீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 

CBSE மருத்துவக் கலந்தாய்வு

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ள 3,524 இடங்களில் 2,224 மாணவர்கள் தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மீதமுள்ள 1,310 இடங்கள் சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

இந்த ஆண்டு தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்து இடம்பிடித்தவர்கள் 1,281 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் கடந்த ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் டூ முடித்த 36% பேருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. 

கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாததால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த 30 பேர் மட்டுமே மருத்துவச் சேர்க்கையில் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வின் மூலம், சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த 1,300 பேருக்கு மேல் இடம் கிடைத்திருக்கிறது.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டுக்கான தர வரிசைப்பட்டியலில் முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவர் மட்டுமே இடம்பிடித்திருக்கிறார். இந்த இடங்களுக்கும் பெரும்பாலும் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே தர வரிசைப்பட்டியலில் முன்வரிசையில் நிற்கிறார்கள். இதனால், சுயநிதி கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் பெருமளவில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிப்பதால், தமிழக மாணவர்கள் அங்கும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இனி, மருத்துவ கல்வி பெற வேண்டும் என்றால், பாடப்புத்தகங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு பயிற்சி மையத்தில் பணம் கட்டிப் படித்து நீட் தேர்வில் அதிகளவில் மதிப்பெண் பெற்றால் மட்டுமே முடியும். இல்லை என்றால் மருத்துவக் கனவை சிதைத்துவிட்டு, கிடைத்த கல்லூரியில் ஏதேனும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்