கல்பாக்கம் அணுஉலை... அவசர ஒத்திகையும் அதிர்ச்சியடைந்த மக்களும்! | Emergency trail in kalpakkam atomic power station area

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (24/08/2017)

கடைசி தொடர்பு:12:28 (24/08/2017)

கல்பாக்கம் அணுஉலை... அவசர ஒத்திகையும் அதிர்ச்சியடைந்த மக்களும்!

சென்னை அணுசக்தி துறை சார்பாக, கல்பாக்கம் அணுஉலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் அவசரநிலை ஒத்திகை நேற்று (23.08.17) நடந்தது.

மெய்யூர், விட்டிலாபுரம், வசவசமுத்திரம், ஆயப்பாக்கம், நல்லாத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசர ஒத்திகை நிகழ்வுக்காக தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், அணுசக்தி துறையினர், மருத்துவக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு என அனைத்து துறையினரும் அந்த கிராமங்களுக்கு விரைந்தனர். இதனால் காலைமுதலே பரபரப்பாக இருந்தது நல்லாத்தூர் கிராமப்பகுதி.

அணுஉலை கல்பாக்கம்

அப்போது காவல்துறையினர், கல்பாக்கம் அணுசக்தி துறையினர் அவசரகால ஒத்திகை குறித்து, மைக்கில் தெருத்தெருவாக அறிவிப்பு செய்தபடியே  இருந்தனர். மருத்துவக்குழுவில் உள்ளவர்கள் வீடுவீடாகச் சென்று பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளை (ஒத்திகை என்பதால் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைக்கு பதிலாக சாக்லெட்டுகள்) மக்களுக்கு கொடுத்தனர். அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டால் வீட்டை விட்டு மக்கள் வெளியே வராமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். எனினும், மீட்புப் பணிக்காக கொண்டுவரப்பட்ட பேருந்துகள் அங்கு வருவதற்குத் தாமதமானதால் பெரும்பாலோனோர் தெருவில் வந்து காத்துக்கொண்டிருந்தனர்.

அவசர ஒத்திகை

சென்னை அணுமின் இயக்குநர் சத்தியநாராயணா அந்த கிராமத்துக்கு வந்து மீட்டுப்புப் பணிகளை வழிநடத்திக் கொண்டிருக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவும் அங்கே வந்தார். நல்லாத்தூர் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளும் வந்தன. கிராம மக்களை பேருந்துகள் மூலம் அவசரஅவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தார்கள். “ஏம்பா ஆடு மாடெல்லாம் வீட்டுல இருக்கு… அப்படியே விட்டுட்டு வரணுமா?” என முதியவர் ஒருவர் கேட்க, “நீங்க மட்டும் வந்தா போதும்!” என மீட்புக்குழுவினர் கூறினார்கள். நடக்கமுடியாதவர்களை எப்படி தூக்கி வந்து ஏற்றுவது என காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்து. ஆனால், வயதானவர்கள் கூட நடந்தே சென்று பேருந்துகளில் ஏறிக்கொண்டனர். இதனால் “நடந்தே வருகிறேன்…” என்று சொன்ன இளைஞர் ஒருவரை, அன்பாக பிடித்து… அலேக்காக தூக்கிவந்து பேருந்தில் ஏற்றினார்கள் மீட்புக்குழுவினர். எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணுக்கதிர் சோதனை முகாமுக்கு பேருந்துகள் சென்றன. பேருந்து ஜன்னல்கள் மூடிய நிலையில்தான் இருக்க வேண்டும் என விதிகள் இருந்தாலும், ஒத்திகை என்பதால் அவை சரிவர பின்பற்றப்படவில்லை. கதவுகளை மூடிய நிலையில் அங்கு அவர்களின் உடலில் கதிரியக்க பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு பேருந்து முழுக்க வந்த கிராம மக்களில் ஒருசிலருக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அவர்களை திருக்கழுக்குன்றம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு முனையத்தில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் கால்நடைகளை எடுத்துச்செல்வது குறித்து எவ்வித ஒத்திகையும் நடத்தப்படவில்லை.

கல்பாக்கம் அவசரநிலை

அப்போது பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், “இப்பகுதியில் கதிர்வீச்சு பாதிப்பு இருந்தால் எப்படி மக்களை மீட்கவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு ஒத்திகைதான் இது. இந்த ஒத்திகை பொதுமக்களுக்காக மட்டும் செய்யப்பட வில்லை. ஒவ்வொரு அரசு அலுவலரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் செய்பப்பட்டது. இதற்காக ஒரு மாத காலம் மீட்புப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்திய அணுசக்தி துறை சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை ஒவ்வொருவரும் தங்கள் அருகில் வசிப்பவர்களிடம் சொல்ல வேண்டும்” என அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் பேசி முடித்ததும், அணுசக்தி துறை சார்பாக அதிகாரிகள் யாரும் மக்களிடத்தில் விளக்கவில்லை.

கல்பாக்கம் அவசரகால ஒத்திகை

இது ஒரு ஒத்திகைதான் என்றாலும், அதை ஒழுங்காக செய்ய வேண்டாமா? எப்போது அணுக்கதிர் வீச்சு வெளியேறும் என்பது யாருக்கு தெரியும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close