வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (24/08/2017)

கடைசி தொடர்பு:13:39 (10/07/2018)

இந்திய மீனவர்களுக்கு கடல் எல்லைகுறித்து விளக்கப்படும்: இலங்கை கடற்படைத் தளபதி முதல் நடவடிக்கை

இலங்கை கடற்படை தளபதி சின்னையா

இந்திய மீனவர்களுக்கு, இந்தியா - இலங்கை இடையேயான கடல் பரப்பு எல்லையினைப் புரியவைக்க, இலங்கைக் கடற்படையின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்  ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான கால வரலாற்றில், விடுதலைப் புலிகளுடனான  யுத்தத்துக்குப் பின், முதன் முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படையின் தளபதியாக, தமிழரான ரியல் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக் கடற்படையின் 21-வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா, கடந்த வாரம் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

தளபதி பொறுப்பை ஏற்ற ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கொழும்பில் உள்ள  கடற்படைத் தலைமையகத்தில் நேற்று தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம், இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கைகள்குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அவரிடம் இந்திய மீனவர்களின் பிரச்னைகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த சின்னையா, '"இந்திய - இலங்கை மீனவர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்பாக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் கடல் எல்லைகுறித்து இந்திய மீனவர்களுக்குக் காண்பிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்'' என்று தெரிவித்தார்.

தமிழர் ஒருவர், இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படையினரின்மீது இந்திய மீனவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக, இலங்கை மீனவர் தரப்பில் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.