Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலகலத்துப்போன அ.தி.மு.க வாட்ஸ்அப்! யுத்தத்தால் அம்பலமாகும் மோசடிகள்

வாட்ஸ் ஆப்

அ.தி.மு.க-வில் கோஷ்டிகள் அதிகரித்ததால், ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் மூலமாக அவதூறு பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். இதில், பல மோசடிகளும் அம்பலத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது. 

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தபோதிலும், அந்த அணியினருக்கு டி.டி.வி.தினகரன் கோஷ்டியினர் கடும் சவாலாக உள்ளனர். ஏற்கெனவே, ஊர் ஊருக்கு ஜெ.தீபா அணியினர் தனியாகச் செயல்பட்டுவரும் சூழலில், தற்போது எடப்பாடி, தினகரன் அணியினர் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இரு அணியினரும் தங்களுக்கு கட்சித் தொண்டர்களிடமும் மாவட்ட நிர்வாகிகளிடமும் ஆதரவு திரட்டிவருகின்றனர். 

ஜெயலலிதா

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க-வின் அமைப்புகளான ஜெ.பேரவை, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் எனப் பல்வேறு அணியினரும் தனித்தனியே வாட்ஸ்அப் குழுக்களைத் தொடங்கி, ஆக்டிவ்வாக ஜெயலலிதா புகழ்பாடும் பணியில் ஈடுபட்டுவந்தனர். அந்தக் குழுக்களில், அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலரும் இடம்பெற்றிருந்தனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தினகரன், ஓ.பி.எஸ் அணியாகப் பிரிந்த பின்னர், இரு தரப்பினரும் தங்களின் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களை, அந்தக் குழுக்களில் இடம் பெற்றபடியே நாகரிகமாகத் தெரிவித்துவந்தனர். தற்போது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இணைந்துவிட்ட நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் தனிமைப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கும் எடப்பாடி தரப்பினருக்கும் இடையே வாட்ஸ்அப் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இரவு நேரத்தில் விடிய விடிய கருத்து மோதல்களில் இரு குழுக்களும் நடத்துகின்றன. 

அ.தி.மு.க கொடிஇதனிடையே,  கட்சியிலும் ஆட்சியிலும் நடந்த மோசடிகளை ஒவ்வொரு தரப்பும் எதிர்த் தரப்பின் மீது புகாராகத் தெரிவிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. குறிப்பாக, அரசு வேலைக்காக கட்சியினரிடமே வசூல் வேட்டை நடத்தியது, தேர்தலின்போது செலவழிக்க வாங்கிய பணத்தை சுருட்டியது, கட்சிப் பொறுப்புகளை வழங்க பணம் வசூலித்தது, டாஸ்மாட் கடையை ஏலம் எடுக்க பணத்தை கமிஷனாகக் கேட்டது, கட்சி நிகழ்ச்சிகளையும் கட்சியின் சார்பாக நலத்திட்ட உதவிகளையும் வழங்க வசூல் வேட்டையில் ஈடுபட்டது, சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து உள்வாடகைக்கு விடுவது எனப் பல்வேறு மோசடிகளை அம்பலப்படுத்திவருகின்றனர்.

தங்கள்மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதுடன், எதிர்த்தரப்பின்மீது புகார்களையும் தெரிவிப்பதால், பல்வேறு மோசடிகள் அம்பலமாகிவருகின்றன. இந்தச் சண்டையின் மூலமாக கட்சிக்குள் இப்படியெல்லாம் கூடவா வசூல் செய்ய முடியும் என கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வியந்துபோய் இருக்கிறார்கள். அத்துடன், இவ்வளவு கேவலமான நபர்கள் இருக்கும் கட்சியிலா நாமும் இருக்கிறோம் என்கிற அளவுக்கு அருவருப்பான நிலைமை உருவாகியிருக்கிறது. இதனால் கட்சியின் உண்மையான விசுவாசிகள் பலர், வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து விலகி, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement