வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (24/08/2017)

கடைசி தொடர்பு:12:30 (24/08/2017)

தனி மனித ரகசியம் காக்கும் வழக்கில் அதிரடி தீர்ப்பு... கமல்ஹாசன் வரவேற்பு!

'தனி மனித ரகசியம் காப்பது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமையே' என்று ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்று, நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவுசெய்துள்ளார். 

கமல்ஹாசன்

ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது, Right to Privacy எனப்படும். தனிநபர் ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பதுகுறித்து விசாரிக்க முடிவுசெய்தது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான  ஒன்பது நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், 'தனிமனித ரகசியம் காப்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையே' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த  ஒன்பது நீதிபதிகளுமே, தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்ற கருத்தில் மாறுபடவில்லை.

தீர்ப்பை வாசித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், கடந்த 1954-ம் ஆண்டு ஆறு நீதிபதிகள் கொண்ட அமர்வு மற்றும் 1962-ம் ஆண்டு எட்டு நீதிபதிகள்கொண்ட அமர்வு ஆகியவை அளித்த தீர்ப்பை ரத்துசெய்வதாகக் கூறினார். 

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள கமல்ஹாசன், 'தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்பதை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கிய மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூற வேண்டும். இதைப் போன்ற கணங்கள்தான் இந்தியாவை உருவாக்குகிறது' என்று தெரிவித்துள்ளார்.