வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (24/08/2017)

கடைசி தொடர்பு:13:01 (24/08/2017)

‘இலாகாக்களைப் பிரியுங்கள்!’ - எடப்பாடி பழனிசாமியிடம் கொந்தளித்த அமைச்சர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன்

‘கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்களின் இலாகாக்களைப் பிரியுங்கள்’ என்று தினகரன் ஆதரவு அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டமாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அவரச ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கட்சியினர், அவர் இறந்த பிறகு சுதந்திரமாக மனதில் உள்ளதைப் பேசத் தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடு, கட்சியில் தினந்தோறும் களேபரம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும் கட்சிக்குத் துரோகம்செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதைக் கண்டித்தும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதுகுறித்து புதுச்சேரியில் உள்ள  ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவியும் எதிர்ப்பாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கியும் அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்.

இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல், மேலும் பூதாகரமாக தமிழகம் முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. தினகரனின் உருவப் பொம்மைகளை அவரது எதிர்ப்பாளர்கள் எரிக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தும் எதிராக, தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது, அ.தி.மு.க-வுக்கு எதிரி அ.தி.மு.க என்றே தோன்றுகிறது. அணிகள் இணைந்த பிறகு, கட்சி வலுப்பெறும் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வியூகம் அமைத்துவருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்திவருகின்றனர்.

ஜெயலலிதா சமாதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்தும் பல்வேறுகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, புதுச்சேரியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக அ.தி.மு.க-வினர் களமிறக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ-க்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் பலதரப்புப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதன் எதிரொலியாக, புதுச்சேரி ரிசார்ட்டில் இரண்டு பெண் எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர். அவர்களைச் சமரசப்படுத்தும் வேலையில் தினகரனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் காட்டமாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சமரசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், “கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்களுக்கு சாதகமாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அமைச்சரவை மாற்றத்தில்கூட கொங்கு மண்டலத்தில் உள்ள சிலரது இலாகாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'கை' வைக்கவில்லை. ஆனால், தினகரன் ஆதரவு என்று சொல்லப்பபடும் அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட  அமைச்சர் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேருக்கு நேராகவே நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவரது இலாகாவை எனக்கு பிரித்துக்கொடுங்கள்' என்று கேட்டார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் சமரசமாகப் பேசியிருக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு, 'நீங்கள் வேண்டுமென்றால் தினகரன் பக்கம் செல்லுங்கள்' எனக்குக் கவலையில்லை என்ற தொனியில் பேசியுள்ளார். இதனால் அந்த அமைச்சர் அங்கிருந்து தொகுதிக்குச் சென்று, தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்" என்றனர்.

இந்தத் தகவல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரிந்ததும் அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார். அப்போது, ’தினகரனால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் உடனடியாக சமரசம் பேசுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தூது பேச, முதல்வர் தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆட்சிக்கு ஏற்பட்ட சிக்கல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கட்சியைக் காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிவருகிறார்.    


டிரெண்டிங் @ விகடன்