வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (24/08/2017)

கடைசி தொடர்பு:12:46 (24/08/2017)

களமிறங்கிய ஸ்டாலின், திவாகரன்! சபாநாயகருடன் முதல்வர் அவசர ஆலோசனை

ஆளும்கட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, சில நாள்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தது. தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு இருஅணிகள் இணைந்ததால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமி அரசுக்கு நாங்கள் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, 19 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு வாபசால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாவும் உடனடியாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் முன்வைத்து ஆளுநருக்கு கடிதம் எழுதியது.

இதனிடையே, சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இல்லாத அமைச்சரவை இருக்க வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிரடியாக கூறினார். அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின், திவாகரன் களமிறங்கியிருக்கும் நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று சபாநாயகர் தனபாலை அவரது அறையில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்த நிலையில் சபாநாயகருடன் வைத்திலிங்கம், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், கே.சின்னையா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தனித்தனியாக நடந்து வரும் ஆலோசனையைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.