ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்!

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவும் வகையில், நவீன வசதிகள்கொண்ட ஆம்புலன்ஸ் சேவை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் துவக்கப்பட்டுள்ளது.

இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்


 ராமேஸ்வரத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக ராமேஸ்வரம் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் அதைத் தொடர்ந்து நாள்தோறும் விபத்துகளும் அதிகரித்துவருகின்றன. இந்த விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிக் காயம் அடையும் மீனவர்களுக்கும் போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க, 55 கி.மீ தூரம் உள்ள ராமநாதபுரத்திற்குதான் செல்ல வேண்டியுள்ளது. 

ஆனால், ராமேஸ்வரம்  அரசு மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸும், யாத்திரைப் பணியாளர் சங்கத்தினர் இயக்கும் ஒரு ஆம்புலன்ஸும் மட்டுமே உள்ள நிலையில், அவசர நேரங்களில் கூடுதல் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், புதிய இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.


முதலுதவி சிகிச்சை முதல் நெஞ்சுவலி உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு உள்ளாகும் நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ சாதனங்களுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகொண்ட நவீன ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை, ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சாரதானந்தா முன்னிலையில் மருத்துவர் மதுரம் அரவிந்த்ராஜ் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், வாணி ஜோசப்ராஜன், விவேகானந்தா வித்யாலயா முதல்வர் ஶ்ரீ ராம், பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!