Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலைப்பளுவினால் தற்கொலைக்கு முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர்!

பேருந்து நிலையம்

வேலைப்பளு, மரியாதையின்மை உள்ளிட்ட பிரச்னைகளால் மனம் உடைந்த சென்னை அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சென்னை அயனாவரம் அரசுப் பேருந்து பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிபவர் ஆறுமுகம். இவர், நேற்றிரவு (23-08-207) 9.15 மணியளவில் அயனாவரம் மின்விளக்கு டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகத்திடம் காவலர்கள் மற்றும் பணிமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவரைக் கீழே இறக்கினர்.

ஆறுமுகத்திடம் பேசினோம். ''எனக்கு 56 வயசு ஆகுது. நான் கொரட்டூர் - பாரிமுனை ரூட்டில் 7-B பஸ் ஓட்டிவருகிறேன். நேற்று காலை ஆறு மணிக்கு பஸ் எடுத்தேன். 10 முறை பஸ் ட்ரிப் போயிட்டு வரணும்னு டெப்போ அதிகாரிங்க ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. ஆனா, காலை 9 மணிக்கே பஸ் ரிப்பேர் ஆகி நடுவழியில நின்னுடுச்சி. அதனால 6 முறைதான் பஸ் ட்ரிப் போச்சி. நைட் 9 மணிக்கு பஸ்ஸ டெப்போவுல விட்டுட்டு, 'நான் வீட்டுக்குப் போறே'னு சொன்னேன். அதுக்கு, 'விடியறதுக்குள்ள 10 முறை ட்ரிப் அடிச்சிட்டுதான் போகணும்'னு அதிகாரிங்க சொன்னாங்க. 'இல்லை... சார். என் டைம் முடிஞ்சிபோச்சி'னு சொன்னேன். அதுக்கு மரியாதை இல்லாம வாடா போடானு அசிங்கமா பேச ஆரம்பிச்சாங்க. 'ஒழுங்கு மரியாதையா வண்டியை ஓட்டு.... இல்லைன்னா, நடக்குறதே அவ்ளோதா'னு மிரட்ட ஆரம்பிச்சாங்க. பஸ் சரியில்லாததுக்கு நான் என்ன பண்ணுவேன்? சரியான பஸ் கொடுத்திருந்தா நான் 10 முறை ட்ரிப் அடிச்சிருப்பேன்.

ஆறுமுகம்

இதுமாதிரி தினந்தினம் பல கஷ்டங்களை எங்க மேலதிகாரிங்க கொடுக்குறாங்க. உண்மையைச் சொல்லணும்னா, இவங்க திட்டுவாங்கனு இன்று முழுவதும் சாப்பிடாமயே பஸ் ஓட்டினேன். இதுல லீவு கேட்டா லீவ் தரமாட்டாங்க. கேள்வி கேட்டா ரிமார்க் பண்ணிடுவாங்க. 31 வருஷமா பஸ் ஓட்டுறேன். அடுத்த வருஷம் ரிட்டயர்டு ஆகப்போறேன். வி.ஆர்.எஸ் கேட்டாலும் தரமாட்டேங்குறாங்க. இதனால தினந்தோறும் மனஅழுத்தம் அதிகமாகுது. எனக்கு வேற வழி தெரியாமதான் மின்விளக்கு டவர் மேல ஏறிட்டேன். அப்போகூட, காவலர்களையும், பஸ் ஊழியர்களையும் தவிர வேறு எந்த அதிகாரிகளும் எங்கிட்ட வந்து பேச்சுவார்த்தை நடத்தலை'' என்றார் கவலையுடன்.

இதுதொடர்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேசினோம். "டெப்போவுல பொறுப்பு வகிக்கிற ஜி.எம்., எப்ப பாத்தாலும் எங்களைத் திட்டிக்கிட்டே இருப்பாரு. 'டிக்கெட் கொடுக்குற மெஷின் ரிப்பேரா இருக்கு. சரி பண்ணி கொடுங்க'னு கேட்டா, 'முடியாது'னு சொல்றாங்க. ஆனா, பயணிகள்கிட்ட டிக்கெட் கொடுக்கும்போது மெஷின் வொர்க் ஆகாம டிக்கெட் பாதியில நின்னுடும். அதுக்கு அந்த டிக்கெட்டுக்கு உண்டான காச எங்க சம்பளத்துல புடிச்சிக்கிறாங்க. அதுபோலக் கண்டக்டருக்குக் கொடுக்கப்படும் பேக் எல்லாம் கிழிஞ்சுபோன பேக்கா இருக்குது. அதுல எப்படி சில்லறை காசை வைக்கமுடியும்.

ஆறுமுகம்

இதை ஜி.எம்-கிட்ட சொன்னா, 'அரசு பஸ்ஸுனா அப்படித்தான் இருக்கும்... இப்படி எல்லாத்துக்கும் புகார் சொல்வீங்களா'னு எங்களையே திருப்பிக் கேட்டுத் திட்டுவார். ஒரு நாள் லீவு கேட்டாலும் தரமாட்டாரு. நாங்க தங்கி இருக்குற இடம் சுத்தமா இருக்காது. பாத்ரூம்குள்ள போகவே முடியாது. ஆனா, அதைத்தான் நாங்க பயன்படுத்தணும். குப்பையிலே படுத்துக்கணும். இப்பகூட ஆறுமுகம் டவர்ல ஏறுன விஷயம் ஜி.எம்-க்குத் தெரியும். ஆனா, அவர் வரலை. எங்களைத் திட்டணும்னா கரெக்டா வந்துடுவாரு" என்றனர் வேதனையுடன்.

இதுபற்றி டெப்போ அதிகாரிகளிடம் கேட்டபோது, "பிரச்னைகள் குறித்து ஊழியர்களிடம் பேசிவிட்டு சரி செய்துவிடுகிறோம்" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement