வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (24/08/2017)

கடைசி தொடர்பு:16:15 (24/08/2017)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளரிடம் மக்கள் மனு அளிக்கும் முகாம் துவக்கம்!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், குறைகளைப்  பூர்த்திசெய்யும் வகையில் மக்கள், ஆணையாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் முகாம் இன்று துவங்கியது. 

pettition to commissionar

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளரிடம், தினமும் மாலை 5மணிக்கு மேல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பிரச்னைகள், குறைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாகவே சந்தித்து மனு அளிக்கலாம் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் ஆணையாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி  மக்கள் மனு அளிக்கும் முகாம் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியிலுள்ள மேற்குமண்டல அலுவலகத்தில் இன்று துவங்கியது. 

pettition to commissionar

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறுகையில், ‘’தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிடும் வகையிலும், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மாநகராட்சி மூலமாக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாகவும், மண்டல வாரியாக அந்தந்த மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை மக்கள் மனு அளிக்கும் முகாம் நடைபெறும்.  இதன் முதல் கட்ட முகாம், இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் துவங்கியது. 34 முதல் 47 வார்டுகள் வரையுள்ள பகுதி மக்கள், அவரவர் வார்டுகளிலுள்ள குறைகளை மனுவாக அளித்துள்ளார்கள். அடுத்தடுத்த வாரங்களில் வடக்கு, கிழக்கு, தெற்கு மண்டங்களில் வியாழன் தோறும் முகாம் நடக்கும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனு அளிக்கும் முகாம்மூலம் மக்கள் புகார்களை வெளிப்படையாகவே கூறலாம். இது தவிர, அந்தந்த மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியிலும் மனுக்களைப் போடலாம் ’’ என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க