நம்புங்க மக்களே... இது நம்ம எம்.எல்.ஏ-க்கள்தான்!

கூவத்தூர் போல தற்போது புதுச்சேரி ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முகாமிட்டுள்ளனர். தேனிக்காரர் அணியுடன் எடப்பாடிக்காரர் அணி இணைந்து ஒரே அ.தி.மு.க-வாக மலர்ந்தாலும், முதலமைச்சரால் நிம்மதியாக உறங்க முடியாத நிலைதான். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்குக் கீழே துணை முதல்வராகப் பணியாற்ற ஒப்புக்கொண்டதும், தமிழகத்தின் அரசியல்ரீதியான பிரச்னைகள் தீர்ந்துவிடும் என நம்பப்பட்டது. ஆனால், தினகரன் அணி பிரிந்து, இப்போது 19 எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். இப்போதைக்கு தமிழகத்தில் அரசியல் சூறாவளி ஓய வாய்ப்பில்லை!

puducherry resort

 

புதுச்சேரியில் முகாமிட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சுகபோகத்தில் திளைக்கின்றனர். காலையில் கடற்கரையில் வாக்கிங். பின்னர் மஸாஜ் செய்துகொண்டு எண்ணெய்க்குளியல் போடுகின்றனர். காலை உணவுக்குப் பின், தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்க்கின்றனர். மாலையில் குழந்தைகளாக மாறி, அணிகளாகப் பிரிந்து பந்து விளையாடி மகிழ்கின்றனர். இரவில், வெளிநாட்டு மதுவகைகள் பரிமாறப்படுகின்றன. வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ருசிமிகுந்த மீன்கள் பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டு, எம்.எல்.ஏ-க்கள் விரும்பும்  வகையில் ருசியாக சமைத்துத் தரப்படுகிறது.

resort

தினகரனைப் பொறுத்தவரை, தன்னிடம் வந்துள்ள எம்.எல்.ஏ-க்களைத் தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் யார் பக்கம் என்று தெரியவில்லை. ''இந்த விஷயத்தில் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுப்போம்'' என அவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும், சட்டசபை கூடும் வரை, ஆட்சிக் கவிழ வாய்ப்பு இல்லையென்றே சொல்லப்படுகிறது. சட்டமன்றம் கூடுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!