'பூஜை அறை, கார், மேக்கப் ரூம்னு... ஒவ்வொரு விநாயகருக்கும் ஒவ்வொரு விசேஷம்!' - சுதா சந்திரன் #GaneshChaturthi

சுதா சந்திரன்

''சின்ன வயசிலிருந்தே பிள்ளையார் சாமின்னா அவ்வளவு பிடிக்கும். விநாயகர் சதுர்த்தியின்போது படைக்கும் உப்பு கொழுக்கட்டை மற்றும் பூரணம் கொழுக்கட்டைகளைச் சாப்பிட காலையிலிருந்தே சமையல்கட்டுக்கும் ஹாலுக்கும் ஓடி ஓடி வருவேன். அந்தளவுக்குக் கொழுக்கட்டை மேலே உயிர். இப்போவரை என் வாழ்க்கையின் மறக்க முடியாத விழா, விநாயகர் சதுர்த்திதான்'' என்று விநாயகரைப் பற்றி பேசப்பேச சிலிர்க்கிறார் நடிகை சுதா சந்திரன். ''நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை. கணபதி ஊர்வலம் வருகிறது என்றால், ஒரே கொண்டாட்டமாக இருக்கும். மும்பையின் கலரே மாறிவிடும். பதினைந்து நாள்களுக்கு முன்னாடியிருந்தே திருவிழா ஆரம்பிச்சிரும். ஒவ்வொரு வீட்டிலுமே சிரத்தை எடுத்து கணபதி வருகைக்காக காத்திருப்பாங்க. 

விநாயகர்

மும்பையில் இருக்கிறவங்களுக்கு லால்பாக்கா ராஜா கோயில் நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அந்தக் கணபதி கோயிலை, லால்பாக்கா என்ற ராஜா கட்டினதால், அந்தப் பெயர். இது மும்பையின் லால்பாக்கா என்கிற இடத்தில் இருக்கு. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் அதற்கு முன்னாடியான ஐந்து நாள்களும் இரவு பகல் வித்தியாசமின்றி கோயிலில் நீண்ட வரிசை இருக்கும். திங்கள்கிழமை பூஜை என்றால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கே வரிசை நிற்கும். என் நடன வகுப்புகளை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, விநாயகர் மற்றும் நடராஜரை வணங்கியே ஆரம்பிப்பேன். புதுசா கார் வாங்கினதும் அந்த காரில் விநாயகர் படத்தைவெச்சு பூஜை செஞ்சேன். என் மேக்கப் அறை, பூஜை அறை என வீட்டில் எங்கே பார்த்தாலும் என் அபிமான விநாயகர் இருப்பார். எங்க வீட்டுப் பூஜை அறையில் புளூ, பிங்க், கிரீன், எல்லோ எனப் பல கலர்களில் விநாயகர் இருக்கார்.. நவதானிய விநாயகரும் இருக்கார்.. சித்தி விநாயகர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 

சுதா சந்திரன்

இத்தனை வருஷங்களாகப் பல கோயில்களுக்குப் போயிருந்தாலும், இது வேணும் அது வேணும்னு வேண்டினதே இல்லை. கோயிலுக்குள்ள நுழையும் வரை ஆயிரத்தெட்டு வேண்டுதல்கள் மனசில் ஓடும். அது என்னவோ உள்ளே போனதும் எல்லாம் மறந்து சுவாமி சிலையைப் பார்த்து மெய் மறந்து நின்னுடுவேன். அதிலும், எங்க பூர்வீகமான திருச்சி, வயலூரில் உள்ள முருகன் கோயிலுக்குப் போனாலே என்னை அறியாமல் அழுகை வந்துடும். அது ஏன்னு தெரியலை. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலும் மனசுக்கு நிறைவான இடம். அம்மா இருந்தபோது அவங்களோடு சேர்ந்துபோய் கும்பிடுவோம். இப்போ, வருடா வருடம் இந்தக் கோயிலுக்கு வந்து கும்பிட மறக்கறதில்லை. அம்மா மறைவுக்குப் பிறகு பிள்ளையார் சதுர்த்திக்கான கொழுகட்டையிலிருந்து பல விஷயங்களை மிஸ் பண்றேன். 

விநாயகர்

எப்பவும் என் பர்ஸூக்குள் வைஷ்ணவி தேவி படமும் இருக்கும். வைஷ்ணவி தேவி, என் கணவர் வீட்டுக் குல தெய்வம். இத்தனை வருடங்களில் ஒரு வருஷம்கூட மும்பை லால்பாக்கா ராஜா கோயிலை மிஸ் பண்ணினதில்லை. இந்த வருடமும் கணபதியின் அனுகிரஹம் இருக்கும்னு நம்புறேன். எந்த இடத்துக்குப் போகணும்னாலும், கடவுளின் ஆசீர்வாதம் இருக்கணும்னு எப்பவும் நம்புவேன். என் வாழ்க்கையில் பல பிரச்னைகள் வந்திருக்கு. கடவுள் அனுகிரஹத்தில் மீண்டு வந்திருக்கேன். அண்ணன், தம்பிகளான கணபதி மற்றும் முருகன் என் வாழ்க்கையில் நம்பிக்கைக் கடவுள்களாக இருக்காங்க'' என நெகிழ்கிறார் சுதா சந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!