வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (24/08/2017)

கடைசி தொடர்பு:14:50 (24/08/2017)

முதல்வர் பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் ஹெச்.ராஜா!

அ.தி.மு.க-வில் உட்கட்சிக் குழப்பம் உச்சத்தில் உள்ள நிலையில், தமிழக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்தார். 

மூன்று தினங்களுக்கு முன்பு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை நேரில் சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும் மனு அளித்து பரபரப்பைக் கூட்டினர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் 'நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் தீர்வு' என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசுக்கு நெருக்கடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து, முதல்வர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் பல கட்ட தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இதையொட்டிதான் இன்று எடப்பாடி பழனிசாமி ஹெச்.ராஜாவைச் சந்தித்துள்ளார்.