திருவண்ணாமலை அரசு புத்தகக் காட்சியில் ஊழலா?! நடந்தது என்ன? | Book stall owners at tiruvannamalai book fair complains of lobbying

வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (24/08/2017)

கடைசி தொடர்பு:16:16 (24/08/2017)

திருவண்ணாமலை அரசு புத்தகக் காட்சியில் ஊழலா?! நடந்தது என்ன?

திருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில், 19-ம் தேதிமுதல் 27-ம் தேதிவரை, அந்நகர மக்கள் இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய கூடாரம் அமைத்து, 120 ஸ்டால்கள் கொண்ட புத்தகக் காட்சியை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திவருகிறது. இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதில், கூடாரம் அமைப்பதில் பெரிய அளவு முறைகேடு நடந்துள்ளது எனச் சாடுகிறனர் பதிப்பாளர்கள். புத்தகக் காட்சி கூடாரம் ஒழுங்காக அமைக்கப்படாததால், புத்தகங்கள் மழையில் நனைந்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும். சரியான பாதுகாப்பு தராததால், சில விற்பனையாளர்கள் ஸ்டாலையே காலிசெய்து கொண்டு கிளம்பிவிட்டனர். என்கின்றனர் பதிப்பாளர்கள்.

ஸ்ரீனிவாசன்ஸ்டாலைக் காலி செய்துகொண்டு கிளம்பிய, சக்சஸ் புத்தக விற்பனை மையம் உரிமையாளர் சீனிவாசன், ''18-ம் தேதி மாலை புத்தகக் காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. டிஸ்பிளே செய்வதற்காக ஸ்டாலில் புத்தகத்தை அடுக்கிக்கொண்டு இருந்தோம். மாலை 6 மணிக்கு லேசான தூரல் மழை பெய்தது. அந்த மழைக்கே எனக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டால்களில் அதிகமாக மழை நீர் ஒழுகியது. காட்சி நடத்தும் நிர்வாகத்திடம் முறையிட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களிடம் இருந்த தார்பாய்களைவைத்து புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டோம். 20-ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், கூடாரத்தின் மேற்கூரை ஒருபகுதி தூக்கி வீசியதில் நாங்கள் அமைத்திருந்த 'நான்கு ஸ்டால்களில்' மழைநீர் தபதபவென கொட்டியது. டிஸ்பிளே செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நனைந்துவிட்டன. மேற்கூரையில் போடப்பட்ட துணி, ஃபேனில் மாட்டிக்கொண்டு ஃபேனோடு ஸ்டால் உள்ளே விழுந்தது. ஸ்டாலுக்குப் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட்டெல்லாம் கீழே விழுந்தன. ஒயரெல்லாம் அறுந்துவிழுந்தன. ஸ்டால் உள்ளவே முழங்கால் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. நிர்வாகத்திடம் சென்று, பாதிக்கப்பட்ட பதிப்பாளர்கள் முறையிட்டோம். அதன்பிறகே தார்பாய் போர்த்துவதாகக் கூறினார்கள். 'எனது ஸ்டாலில் அதிக அளவு மழைநீர் ஒழுகுகிறது. அதனால் அந்தப் பக்கத்தில் இருந்து தார்பாய் போர்த்தி வாருங்கள்' என்று கேட்டேன். அதற்கு, 'ஒன்று இரண்டு என வரிசை பிரகாரம்தான் தார்பாய் போர்த்துவோம்' என ரூல்ஸ் பேசுகிறார்கள். கூடாரம் அமைத்து வேலை பார்த்தவர்கள் அனைவரும் இந்தி பேசுபவர்கள் என்பதால், நாங்கள் சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் பேசுவது எங்களுக்குப் புரியவில்லை. இவர்களை நம்பினால் அனைத்துப் புத்தகங்களையும் மழையில்தான் விடவேண்டியது இருக்கும் என்று ஸ்டாலை காலிசெய்துகொண்டு கிளம்பிவிட்டேன். ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மழையில் நனைந்துவிட்டது. மேலும் போக்குவரத்துச் செலவு, ஏற்றுக்கூலி மற்றும் ஒரு ஸ்டாலுக்கு ஏழாயிரம் ரூபாய் என நான்கு ஸ்டால்களுக்கு வாடகை என ஒரு லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது'' எனப் புலம்பினார்.

இதுகுறித்து அருணகிரி மற்றும் கார்த்திக் பதிப்பகத்தினர், ''மழைநீர் ஸ்டாலுக்குள்ளே ஒழுகியதும் டிஸ்பிளே செய்த புக்ஸைப் பாதுகாப்பதற்குள், மழைநீர் தரையில் ஊறி கீழே பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் முழுக்க ஊறிவிட்டன. நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் போடப்பட்ட பிளாஸ்டிக் பாய் தரமானதாக இல்லை. நாங்களே இரண்டாயிரம், மூன்றாயிரம் போட்டு புதிய பிளாஸ்டிக் பாய் வாங்கிக்கொண்டுவந்து ஸ்டால் மேலே போட்டு புத்தகத்தைப் பாதுகாத்து உள்ளோம். 150 ரூபாய் மதிப்பிலான ஒரு புத்தகத்தை வாங்கி விற்பனை செய்தால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதுவும் இங்கே கிடைக்காதுபோல் ஆகிவிட்டது. ஐம்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி ஈடுகட்ட போகிறோம் என்றே தெரியவில்லை'' என்றபடியே புத்தகங்களைக் காயவைத்துக்கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை

இதுகுறித்து திருவண்ணாமலை புத்தகக் காட்சியில் ஸ்டால் அமைத்திருக்கும் பல பதிப்பாளர்களிடம் பேசினோம். ''மத்திய அரசு, புத்தகக் காட்சி நடத்துவதற்கு 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதில், காட்சிக் கூடாரம் அமைப்பதற்கு, ஸ்டால் அமைப்பதற்கு, தரை வாடகை போன்றவை அடங்கும். ஆனால், திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட காட்சிக்கு 35 லட்சம் ரூபாய் வரை செலவுகள் ஆவதற்கு வாய்பே இல்லை. 15 லட்சத்துக்குள் முடிந்துவிடும். மட்டமான தகரங்கள், துணிகளைவைத்தே கூடாரங்கள் அமைத்துள்ளனர். ஒரு மழைக்கே மழைநீர் ஸ்டாலுக்குள் வந்துவிட்டது. கூடாரமே ஒருபக்கமாக சாய்ந்த நிலையில் உள்ளது. புத்தகங்கள் விரைவில் தீப்பற்றக்கூடியவை. அதனால், மின்சாரம் அமைப்பதில், காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஆனால், இங்கே அதுபோன்று இல்லை. துண்டுதுண்டான ஒயர்களை இணைத்து சப்ளை கொடுத்திருக்கின்றனர். ATM- கார்டு ஸ்வைப் செய்யும் மெஷின் சார்ஜ் போடுவதற்கு, பில் மெஷினுக்கு பவர் கொடுக்கக்கூட இங்கு பிளக் பாயின்ட் வசதி ஏற்படுத்தித் தரவில்லை. மின்சாரம் சீராக இருக்க, பூமியில் இருந்து கிடைக்கக்கூடிய 'எர்த்' மிகவும் அவசியம். அது இங்கு கொடுக்கவே இல்லை. தினமும் ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு மேல் காட்சியைப் பார்ப்பதற்கு வருகின்றனர். அவர்களுக்கு மின்சாரம் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டால் என்ன ஆவது? வெளியில் இருந்துவரும் வாசகர்களுக்கு ஒழுங்கான முறையில் தண்ணீர் வசதி செய்து தரவில்லை.

60 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து செய்யாறு, ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ - மாணவிகள் அழைத்துவரப்படுகிறார்கள் அவர்களுக்கு முறையான கழிவறை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. பதிப்பாளர்கள் அவர்களின் ஸ்டாலிலே இரவு தங்குகிறனர். அவர்களுக்கும் கழிவறை வசதி செய்து தரவில்லை. நகராட்சி குப்பைக்கிடங்கு பக்கதிலேயே காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் ஈக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. ஈ மருந்துகள்கூட அடிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் பதிப்பாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம்மூலம் பிரபலமான எழுத்தாளர்கள் இயக்குநர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்களை வரவைக்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்குப் பலபேர் காட்சிக்கு வருவார்கள். அப்படிவரும் பார்வையாளர்களுக்கு ஓர் இடத்தில் அமர்வதற்கு பந்தல்கூடப் போடவில்லை. மழையில் நனையவேண்டிய நிலை உள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட்டும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் காட்சி நடத்துவதற்கு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்துகொடுக்கவில்லை. 35 லட்சம் ரூபாய் மற்றும் ஸ்டால் ரென்ட் 7 லட்சம் ரூபாய் என 42 லட்சம் ரூபாய்க்கான வேலை எதுவுமே இங்கே நடக்கவில்லை. 40-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மழைநீர் ஒழுகிப் புத்தகங்கள் நனைந்துள்ளன. பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்வரை பதிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நஷ்ட ஈடு வழங்கவேண்டும். இனிமேல் அமைக்கப்படும் கூடாரங்கள் மழைக்குத் தாங்கக்கூடியதாக உறுதியாக இருக்கவேண்டும்'' என்றனர்.

இதுகுறித்து நேஷனல் புக் டிரஸ்ட் சென்னை புரோகிராம் அலுவலர் மதன்ராஜிடம் பேசினோம். ''எல்லா இடங்களிளும் அமைப்பது போன்றே இங்கேயும் ஷெட் அமைத்தோம். ஆனால், காற்று கொஞ்சம் பலமாக அடித்ததால் மேற்கூரை ஒருபக்கம் பெயர்ந்துவிட்டது. அவற்றை உடனே சரிசெய்து கொடுத்துவிட்டோம். தினந்தோறும் 5 போர் ஷெட் மேலே ஏறிச்சென்று கண்காணித்து வருகிறோம். காட்சி அமைப்பதற்கு எவ்வளவு செலவாகி உள்ளது என்பதைக் காட்சி முடித்த பிறகே கணக்கிட்டுத் தெரிவிப்போம்'' என்றார்.

மாணவர்களிடையே, மக்களிடையே, புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவே இந்தப் புத்தகக் காட்சியை நடத்த அரசு பணம் ஒதுக்குகிறது என்றால் இதிலுமா முறைகேடல் நடக்கிறது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்