'அண்ணன்கள் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அவர்களுடன் தொடர்ந்து செயல்படுவேன்’ - எம்.எல்.ஏ கீதா உறுதி! | I will stand with edappadi palanisamy and paneerselvam,says mla geetha!.

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (24/08/2017)

கடைசி தொடர்பு:13:04 (04/07/2018)

'அண்ணன்கள் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அவர்களுடன் தொடர்ந்து செயல்படுவேன்’ - எம்.எல்.ஏ கீதா உறுதி!


 

தமிழகத்தை ஆளும் ஆட்சியின் நிலைமையும், அ.தி.மு.க கட்சியின் நிலைமையும் கவலைக்கிடமாக இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்போடு ஓ.பி.எஸ் தரப்பு கைகோத்து, 'ஒற்றுமை' காட்டினாலும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் முறுக்கிக்கொண்டு, தனக்குக் கீழ் இருக்கும் 19 எம்.எல்.ஏ-க்களைக்கொண்டுபோய் புதுச்சேரி ரிசார்ட்ஸில் அடைத்துவைத்திருக்கிறார். அவர் நினைத்தால், எந்நேரம் வேண்டுமானாலும் தமிழகத்தில் ஆட்சி கவிழக்கூடிய நிலை இருக்கிறது.

இந்த நிலையில், கட்சியில் மாவட்ட, மாநில பொறுப்புகளில் இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை அந்தப் பதவிகலிருந்து நேற்று நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை நியமிப்பதாக அறிவித்தார் டி.டி.வி.தினகரன். இந்நிலையில், கதிகலங்கிப்போன முதல்வர் தரப்பு, தங்கள் பின்னே இருக்கும் எம்.எல்.ஏ-க்களை விட்டு, தங்களுக்கு அவர்கள் ஆதரவு தருவதை உறுதிசெய்ய, அவர்களைவைத்து மீடியாக்களுக்குப் பேட்டி தர வைக்க முயற்சிசெய்வதாக, அ.தி.மு.க-வில் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான கீதா, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து,
 "சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னை, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நிறுத்தி, 35,301 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தவர் அம்மா அவர்கள். அதேபோல,என்னை அப்படி வெற்றிபெறவைத்த தொகுதி மக்களுக்கு நன்றி. அன்று முதல் இன்று வரை அம்மா வழியில் அண்ணன்கள் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்திவந்திருக்கிறேன்.

அம்மா அவர்களின் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்ற, அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சிசெய்துகொண்டிருக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுடனும் தொடர்ந்து செயல்படுவேன் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அறிவிக்கும் திட்டங்களை, அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் அவர்களோடு இணைந்து கிருஷ்ணராயபுரம் தொகுதி மக்களுக்குச் செயல்படுத்துவேன் என்பதை தொகுதி மக்களுக்கு இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேட்டியளித்திருக்கிறார்.

இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர் சிலர்,  "எம்.எல்.ஏ., கீதா இப்படி திடீர்ன்னு வான்ட்டடா வந்து பேட்டி கொடுத்ததற்குக் காரணம், முதல்வர் தனக்கிருக்கும் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை இப்படி பேட்டி கொடுக்கவைத்து, தனது பலத்தை நிரூபிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், கீதாவின் இந்த 'முதல்வர் ஆதரவு' பேட்டிக்குப் பின்னே, மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை கண்டிப்பாக இருக்கிறார். காரணம், தனது ஆதரவாளரான போக்குவரத்துத்துறை அமைச்சரும், கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை டி.டி.வி.தினகரன் பறித்து, அந்தப் பதவியில் அவரது ஆதரவாளரான அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வை நியமிப்பதாக அறிவித்ததால்தான்.

இதன்மூலம்,செந்தில்பாலாஜி  டி.டி.வி.தினகரன் அணிக்கு கீதாவை இழுக்கக்கூடும் என்று தம்பிதுரை பயப்படுகிறார். இந்தச் சூழலில், சுறுசுறுப்பான செந்தில்பாலாஜி கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க புள்ளிகளை தினகரன் அணிக்கு இழுக்க முயன்று வருகிறார். இந்நிலையில், கீதாவுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ  சீட் வாங்கிக்கொடுத்து, ஜெயிக்க வைத்ததே செந்தில்பாலாஜிதான். சில மாதங்களுக்கு முன்புதான் கீதா, அமைச்சர் ஆதரவாளராக மாறினார். இருந்தாலும், செந்தில்பாலாஜியால்தான் தனக்கு இந்த நல்ல நிலைமை வந்தது என்ற நன்றியுணர்ச்சியில் கீதா எப்போது வேண்டுமானாலும்,செந்தில்பாலாஜி பேச்சைக் கேட்டு தினகரன் அணி பக்கம் குடை சாயலாம் என்ற பயத்தில்தான் தம்பிதுரை, தொகுதி மக்களுக்குச் சொல்வதுபோல இப்படி முதல்வர் ஆதரவு நிலையைப் பேட்டியாகத் தர வைத்திருக்கிறார். இருந்தாலும்,செந்தில்பாலாஜி ராஜதந்திரம், கீதா விக்கெட்டை வீழ்த்தியே தீரும்" என்றார்கள்.