புதுச்சேரி ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களிடம் போலீஸ் எஸ்.பி அதிரடி விசாரணை!   

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் புதுச்சேரி காவல்துறை சீனியர் எஸ்.பி விசாரணை நடத்தியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

puducherry resort


அ.தி.மு.க-வில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் பாணியில் புதுச்சேரி தனியார் பீச் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஓ.பி.ஸ் அணியைச் சேர்ந்தவரும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டின் முன்பு டி.டி.வி.தினகரனின் உருவ பொம்மையை எரித்து தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஓம்சக்தி சேகர் அளித்த மனுவில், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்தது. இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் கட்சி இணைந்துள்ளது. தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த 18 எம்.எல்.ஏ-க்களும் வலுக்கட்டாயமாகக் கடத்தி வரப்பட்டு இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சமூகவிரோத சக்திகள் தமிழக அரசைக் கலைக்க எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இப்படி செய்யப்பட்டிருக்கிறது. அந்த எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்தால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். அதனால், விடுதியிலிருந்து அவர்களை வெளியேற்றி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஓம்சக்தி சேகரின் புகாரையடுத்து, புதுச்சேரி காவல்துறையின் சீனியர் எஸ்.பி ராஜீவ் ரஞ்சன், ரிசார்ட்டுக்குள் சென்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் ரஞ்சன், "ரிசார்ட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது. இதன் பேரில் அங்கு ஆய்வு செய்தேன். எம்.எல்.ஏ-க்களிடம் விசாரணை நடத்தவில்லை. ரிசார்ட்டில் ஆய்வு மட்டுமே மேற்கொண்டேன். சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவுமில்லை. பாதுகாப்பு அளித்து காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டேன்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!