'ஆந்திராவில் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்... ஆனால், இங்கே?!’ | Pension for Andhra transgenders - what is the status of Tamilnadu?

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (24/08/2017)

கடைசி தொடர்பு:21:20 (24/08/2017)

'ஆந்திராவில் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்... ஆனால், இங்கே?!’

திருநங்கை

”ஆந்திர மாநில அரசு, அனைவருக்கும் சம உரிமை, மேம்பட்ட வாழ்வாதாரம் அளிக்கும் விஷயத்தில் அக்கறைகொண்டுள்ளது. அதில் ஒன்றாக, திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் குறித்துப் பரிசீலித்து வருகிறது'' என்று அறிவித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டிலேயே நாற்பது வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டு திருநங்கைகளிடம் பேசினோம். 

கிரேஸ் பானு, சமூகச் செயற்பாட்டாளர்: 

திருநங்கை

''ஆந்திர அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு தமிழ்நாட்டு திருநங்கைகளின் தொடர் போராட்டங்களே காரணம். இது நிச்சயம் வரவேற்கத்தக்க திட்டம். தமிழ்நாட்டில் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆந்திராவில் வயது வரம்பு இல்லாமல் எல்லா திருநங்கைகளுக்கும் ஓய்வூதியம் வழங்கினால், நன்றாக இருக்கும். அது, திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவியாக இருக்கும். இங்கே கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய், இன்றைய நிலையில் ஜிஎஸ்டிக்கே சரியாகிவிடும்போல. அந்தத் தொகையையும் கொஞ்சம் அதிகமாக்கிக் கொடுத்தால் நல்லது.'' 

லிவிங் ஸ்மைல் வித்யா, அரங்க கலைஞர்: 

''என்னைப் பொருத்தவரை அரசாங்கம் இப்படி ஓய்வூதியம் வழங்குவதற்குப் பதில், அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலையை வழங்கலாம். நாற்பது வயசுக்கு மேலேதான் தமிழ்நாட்டில் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. அப்படின்னா, அந்த நாற்பது வயசு வரைக்கும் பாலியல் தொழில், பிச்சை எடுக்கும் தொழில்னு வாழ்க்கையை ஓட்டும் நிலை ஏற்படுது. அதனால், வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால், அவங்க தேவைகளை அவங்களே செய்துப்பாங்களே. அரசாங்கமும் ஓய்வூதியம் என்கிற பெயரில் திருநங்கைபோனாபோகுதுன்னு பரிதாபப்பட்டு கொடுக்க வேண்டியதில்லை.'' 

சுபிக்‌ஷா, தென்னிந்திய திருநங்கை சங்கத்தின் துணைச் செயலாளர்: 

''ஆந்திரால கொண்டுவரும் இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாட்டுத் திருநங்கைகள்தான் முன்னோடின்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. தமிழ்நாட்டில் கொடுத்துட்டிருந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இடையில் கொஞ்ச நாள் கிடைக்காமல் இருந்துச்சு. இந்தத் தொகை போதுமானதா இல்லைன்னாலும், அரசாங்கம் இதையாவது செய்யறாங்களேனு ஆறுதல் அடையறோம். இதேமாதிரி திருநங்கைகளுக்குச் செய்யவேண்டிய விஷயங்களை அரசாங்கம் பரிசீலனை செய்யணும். வேலைவாய்ப்பு, கல்வி என எல்லா வகையிலும் கொடுக்கப்படவேண்டிய சலுகைகளைக் கொடுக்கணும்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க