துணை முதல்வராகிறார் தனபால்? | Dhanapal likely to become deputy chief minister!

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (24/08/2017)

கடைசி தொடர்பு:15:08 (24/08/2017)

துணை முதல்வராகிறார் தனபால்?


 

திவாகரன் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள சபாநாயகர் தனபாலைத் துணை முதல்வராக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பு தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். இதைத்தொடர்ந்து தினகரன் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டு வந்தது. இதனிடையே இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தினகரனை ஓரம்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி அணியினர், ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது. இந்தநிலையில், பெரம்பலூர் தமிழ்ச்செல்வன், அட்டவணைப்பிரிவு எம்.எல்.ஏ-க்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை தமிழ்ச்செல்வன் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் சந்தித்துப்பேசினர். அப்போது, எங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் முதல்வர் பழனிசாமி. இந்தநிலையில், பிரிந்துகிடந்த ஓ.பன்னீர்செல்வம் அணியைத் தன்னுடைய அணியில் இணைந்தார் முதல்வர் பழனிசாமி. தினகரன் ஓரம்கட்டப்பட்டு நடந்த இந்த இணைப்பால் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி அரசுக்கு அளித்தவந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அவர்கள் நேற்று முன்தினம் கொடுத்தனர்.

இதனிடையே, "சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும். பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இல்லாத அமைச்சரவை இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தார் சசிகலா சகோதரர் திவாகரன். இந்தச் சூழ்நிலையில், சபாநாயகர் தனபாலை இன்று காலை முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்துப் பேசினார். சில நிமிட ஆலோசனைக்குப் பின்னர், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சபாநாயகர் தனபாலைத் துணை முதல்வராக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்னொரு துணை முதல்வராக தனபாலை ஆக்கலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.