“ஓ.பன்னீர்செல்வம் வலையில் விழுந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி..!” - தனியரசு

தனியரசு

கூவத்தூர் ரிசார்ட் பரபரப்பின்போதே கோடிகளில் பேரம் நடந்ததாக சர்ச்சைகளில் சிக்கிய தனியரசு எம்.எல்.ஏ., இப்போது வின்ட் ஃபிளவர் பஞ்சாயத்துகளுக்காக பரபரப்பாக தயாராகிக்கொண்டு இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

''அணிகள் இணைந்துவிட்டன... அடுத்து என்ன?''

''எடப்பாடி தலைமையிலான அரசு ஊழல் ஆட்சி நடத்துகிறது என்று நாள்தோறும் பேசிக்கொண்டு, பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்திருந்த ஓ.பி.எஸ், இப்போது அதே ஆட்சிக்கு தலைமையேற்று இருப்பதுதான் முரணாக இருக்கிறது. தினகரனை விலக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணியை மட்டும் கட்சிக்குள் கொண்டுவந்தால், அது கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடிகளை உண்டாக்கி, ஆபத்தை ஏற்படுத்தும் என்று பலமுறை நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.  அது தற்போது நிரூபணமாகி வருகிறது. கடந்த 6 மாத காலமாக பி.ஜே.பி மற்றும் தி.மு.க-வுடன் இணைந்துகொண்டு எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்த ஓ.பி.எஸ், அது முடியாமல்போனதால், இப்போது இணைப்பு நடவடிக்கையின் மூலம் தினகரன் தரப்புக்கு அதிருப்தியை உண்டாக்கி, இந்த ஆட்சியை எளிதாகக் கவிழ்த்துவிடும் நிலையை உருவாக்கியிருக்கிறார். இப்போதுதான் அவர், முகம் மலர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். பி.ஜே.பி-யும், ஓ.பி.எஸ்-ஸும் என்னென்ன ஆசை வார்த்தைகளைப் பேசினார்களோ தெரியவில்லை. அவர்கள் விரித்த வலையில் எடப்பாடியும், சில மூத்த அமைச்சர்களும் விழுந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.'' 

''தினகரன் பக்கம் நீங்கள் சாய்ந்துவிட்டது ஏன்?'' 

''அப்படியெல்லாம் இல்லை. என் முடிவை தொடர் ஆய்வுகளுக்குப் பிறகே அறிவிப்பேன். ஆனால், கூவத்தூர் விடுதியில் எல்லா வகையான அடக்குமுறைகளையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு,   எடப்பாடியின் ஆட்சியைக் காப்பாற்ற சிரமப்பட்டவர்களில் அந்த 19 எம்.எல்.ஏ-க்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அவர்களை எல்லாம் நிராகரித்துவிட்டு, இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தவர்களுடன் இப்போது இணைந்துகொண்டு, அவர்களுக்கு பதவி கொடுத்து, மரியாதை செய்து அழகு பார்க்கிறது எடப்பாடி தலைமையிலான அரசு. ஆட்சியைக் காப்பதற்காக உழைத்தவர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். ஆட்சிமீது நம்பிக்கை இல்லை என்றவர்கள் இன்று சகல மரியாதைகளையும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். தினகரனை தவிர்த்துவிட்டு, அவர் சார்ந்த 19 எம்.எல்.ஏ-க்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல்,  சட்டமன்றத்தில் இவர்களால் நிச்சயமாகப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.''

வின்ட்.ஃப்ளவர்

''உங்களின் கோரிக்கைதான் என்ன..?''

''பி.ஜே.பி-யின் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சாமல், எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் தினகரன் தரப்பை சந்தித்துப் பேச வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி, அமைச்சரவையிலும் அவர்களுக்கு இடம் கொடுத்து இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்தால், மட்டுமே ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி, மக்களுக்குத் தேவையான பல நலத்திட்டப் பணிகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சிறப்பாகச் செய்ய முடியும். குறிப்பாக இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க முடியும்.''

''சசிகலா குடும்பத்தினர் மறுபடியும் கட்சிக்குள் வர வேண்டும் என்கிறீர்களா?''

''ஆமாம். அவர்கள் அதிகாரத்தில் இருந்தால், கட்சியின் கட்டுப்பாடும் வலிமையும் அதிகரிக்கும். 'சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருந்தால், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப அ.தி.மு.க-வைக் கையாள முடியாது' என்று கருதுகிறது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற சூழலில் தினகரனும், மன்னார்குடி ஆட்களும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தினால்தான் பி.ஜே.பி-யிடமிருந்து அ.தி.மு.க-வை விடுவிக்க முடியும்.''

''தனியரசு, ஏற்கெனவே தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். பேரம் இன்னும் முடியவில்லை என்பதால் அறிவிக்காமல் இருக்கிறார் என்கிறார்களே?''

''வழக்கமாக வரும் யூகங்கள்தான் அவை. இதுவரை யாரும் எங்களை அழைத்துப் பேரம் பேசவோ, வேறுவிதமான உத்திரவாதங்களோ அளிக்கவில்லை.''

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!