விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பல திட்டங்கள் அறிவிப்பு!

                       
 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், "கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மூலம் நடப்பு ஆண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்தில் பழச்செடிகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட உள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மா, கொய்யா, காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனைப்பயிர்கள் பரப்பு விரிவாக்கம், வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல் போன்றவற்றிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய மானாவரி பகுதி மேம்பாடு திட்டத்தில் தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் அமைக்கவும் ,நடப்பாண்டில் 200 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. நடப்பு ஆண்டிற்கு குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக நுண்ணீர் பாசன கருவிகள், சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்பாசன நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிறப்பினத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மற்றும் 75 சதவிகிதம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படவுள்ளது. இதற்காக, ரூ 570 லட்சம் இத்திட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானாவரி பரப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர் சார்ந்த பண்ணையம் அமைத்தல்(மரவள்ளி), மண்புழு உரக்கூடாரம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, பழச்செடிகள், காய்கறிவிதைகள் மற்றும் நுண்ணீர் பாசனக்கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அதேபோல்,கரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு அதிகப்பட்சம் ரூ 2 லட்சம் பொருளீட்டுக்கடன் 5 சதவிகிதம் வட்டியிலும்,வியாபாரிகளுக்கு 9 சதவிகித வட்டியில் அதிகப்பட்சம் 1 லட்சம் பொருளீட்டுக்கடன் பெறலாம். மேலும், ராயனூரில் உள்ள குளிர்பதனக் கிடங்கின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை சேமித்து வைத்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே,கரூர் மாவட்ட விவசாயிகள் அந்தந்த துறையை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!