வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (25/08/2017)

கடைசி தொடர்பு:09:26 (25/08/2017)

காற்றழுத்தத் தாழ்வுநிலையால் இன்றும் மழை தொடரும்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகத்தில் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை

வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் மையம்கொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலையால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஒடிசா முதல் தெலுங்கானா வரை, வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுநிலையால், வட தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனே காணப்படுகிறது. இதனால் சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது. சென்னையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்து சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது.