சென்னை மெட்ரோ ரயிலில் அதிரடி கட்டணச் சலுகை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களில் சிறப்புக் கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் சேவையில், தொடர்ந்து பல சேவைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மெட்ரோ பயணிகளுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தினசரி பயணச்சீட்டு, டோக்கன்கள், ஸ்மார்ட் அட்டைகளுக்கு 20 சதவிகித கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயண கட்டணச் சலுகை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலம் என்பதாலும், அதனால் தொடர் விடுமுறைகள் வருவதாலும் இந்த கட்டணச் சலுகை அறிவித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் சேவையினை விரிவுபடுத்த பல புதிய முயற்சிகளையும் மெட்ரோ நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘இலவச சைக்கிள் சேவை’ தொடங்கப்பட்டது. ரயில் நிலையங்களிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலுள்ள பகுதிகளுக்கு, இந்த சைக்கிள் சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுபோல் பல புதிய வசதிகளும் மெட்ரோ ரயில் சேவைகளில் மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!