Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசாயனக் கழிவுநீரால் செத்துமடியும் ஆயிரக்கணக்கான மீன்கள்!

ராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றாங்கரை பகுதியில் இறால் பண்ணை ரசாயனக் கழிவு நீர் கலப்பால் ஆயிரக்கணக்கான மீன்கள்  உயிரிழந்து மீண்டும் கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய உயிரிழந்த மீன்கள்

 ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்ட கடலோரப் பகுதியானது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வரும் நிலையில் அந்தக் கடற்பகுதியில் வாழும் உயிரினங்களின் அழிவுக்கு மூல காரணமாக உள்ளன இம்மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணைகள். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளது இங்கு வளர்க்கப்படும் இறால்கள் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பெரிய அளவினான இறால்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தோனேஷியாவிலிருந்து இறால் குஞ்சுகளும், அந்தக் குஞ்சுகள் குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சி அடையத் தேவையான ரசாயன உணவுகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரைப் பகுதியில் நதிப்பாலத்திலிருந்து தேவிபட்டினம் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் இறால் குஞ்சுகளின் கழிவுகள் அனைத்தும் இப்பகுதியில் உள்ள கடலோரப் பகுதிகளிலும், அவற்றின் அருகாமையில் அமைந்திருக்கக்கூடிய பிரேக் வாட்டர் பகுதியிலும் கலக்கும் வகையில் இறால் பண்ணைகள் அமைந்துள்ளது.

 அதிக ரசாயனம் கலந்த இந்தக் கழிவுகளின் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள பிரேக் வாட்டர் பகுதியில் கலப்பதால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் மீன் இனங்களும் மற்ற கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. கடந்த 9-ம் தேதி ஆற்றாங்கரைப் பகுதியில் குமுளா, ஓரா, சீலி, நெத்திலி போன்ற மீன் வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியிருந்தன. இது குறித்து ஆய்வு செய்த மீன் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தனர்.

 இந்த நிலையில் இன்று மீண்டும் ஆற்றங்கரைக் கடற்கரை ஓரங்களில் அதிகளவிலான மீன்கள் உயிரிழந்த நிலையில் ஒதுங்கியுள்ளன.  இந்த மீன்களின் அழிவினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய்கள் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இறந்து ஒதுங்கியுள்ள மீன்களைத் தெரியாமல் விற்பனை செய்வதன் மூலமோ இப்பகுதியில் உலவும் உயிரினங்கள் இதை உண்பதன் மூலமோ நோய்க் கிருமிகள் பரவும் நிலை உள்ளது. நோய்க் கிருமிகள் பரவி பெரும் இழப்புகள் மீட்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன் இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்து முறைப்படுத்துவதுடன் அவற்றின் மூலம் கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகளைத் தடுத்து மீன் இனங்களைக் காக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

 இது குறித்து மீன் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஆற்றாங்கரைப் பகுதியில் மழை பெய்த காரணத்தால் உப்புத் தன்மைக் குறைந்து மீன்கள் சுவாசக் குறைவால் இறந்திருக்கலாம் எனவும், மேலும் மீன்கள் இறப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு முடிவுக்குப் பின்னரே முழுமையான காரணம் தெரிய வரும்'' என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement