'உயிருடன் திரும்புவேனாயென அழுது புலம்பினேன்' - தூக்கிலிருந்து உயிர் தப்பிய மணமகன் கண்ணீர்

மீனவர் லோங்லெட்-கொலஸ்டிகா

இலங்கை நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனையிலிருந்து தப்பிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் லோங்லட், பட்டதாரி பெண்ணை கரம்பிடித்துள்ளார். "இனி நான் உயிருடன் ஊர் திரும்பப்போவதில்லை என நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தேன். மக்களின் எழுச்சியாலும் மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியாலும் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன்" என்று மணமகன் லோங்லட் கண்ணீருடன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியது. இந்த வழக்கிலிருந்து மீனவர்களை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா  தனிகவனம் செலுத்தினார். ஆனாலும், மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மீனவர்கள் 5 பேருக்கும் கொழும்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை அறிந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தூக்குத் தண்டனையிலிருந்து 5 மீனவர்களையும் மீட்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளைத்  தொடர்ந்து நவம்பர் 21-ம் தேதி நல்லெண்ண அடிப்படையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது இலங்கை அரசு. அவ்வாறு மரணத்தின் வாசலைத் தொட்டுவந்த மீனவர்களில் ஒருவர் லோங்லட் (27). மரணத்தை வென்று வந்த லோங்லட்டுக்கு நேற்று மணவாழ்க்கை துவங்கியிருக்கிறது. நிம்மதியற்ற உயிருக்கு நிச்சயமற்ற தொழிலான மீன்பிடி தொழிலை மறந்து சரக்கு வாகன ஓட்டுநராக மாறியிருக்கும் லோங்லட்டைக் கரம்பிடித்திருக்கிறார் பட்டதாரி பெண்ணான கொலஸ்டிகா.

பெற்றோருடன் மீனவர் லோங்லெட்
 

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த மகிழ்ச்சியுடன் இருந்த லோங்லட் நம்மிடம், ''அன்றாட பிழைப்புக்காக மீன்பிடிக்கச் சென்ற எங்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக இலங்கை அரசு அபாண்ட பழி சுமத்தியது. சுமார் 3 ஆண்டுகள் சிறையிலிருந்த எங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் இனி நாம் உயிருடன் ஊர் திரும்பப்போவதில்லை என நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தோம். மக்களின் எழுச்சியாலும் மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியாலும் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம். எங்கள் உயிரைக் காப்பாற்றிய அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் வாழ்நாள் எல்லாம் கடமைப்பட்டுள்ளோம். இந்நிலையில் போதுமான வருமானமில்லை என்றாலும் நிம்மதியாக  உயிர் வாழ்ந்தால் போதும் எனக் கருதி கடலுக்குச் செல்வதை விட்டுவிட்டு வேன் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக எனக்கு இல்லற வாழ்க்கையும் அமைந்துள்ளது. இந்த மகிழ்ச்சி எப்போதும் எங்கள் வாழ்வில் நீடிக்கும்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!