Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிராமப்புற நுாலகத்தை அலட்சியப்படுத்திய அதிகாரிகள்... இளைஞர்களின் அக்கறை!

   

''ஓர் இனத்தை அழிக்கவேண்டுமானால் முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும்'' என்பார்கள். அந்த வகையில்தான் இலங்கையில் யாழ் நூலகம் சிங்களர்களால் தீக்கிறையாக்கப்பட்டது. புத்தகம் வாசிக்கும் மனிதன் முழு மனிதனாகச் சமூகத்தில் வலம்வருவான். அந்த அளவுக்குப் புத்தகம் ஒருமனிதனை மாற்றும். புத்தகம் படிப்பவர்களுக்கு அதன் உணர்வு நன்றாகத் தெரியும். இப்படிப் பொக்கிஷம் நிறைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்தான்... ஒரு கிராமத்தில் மழை நீரில் நனைந்து கறையான் அரித்து பயனற்றதாகியிருக்கிறது. இதைக்கண்டு அந்தக் கிராம இளைஞர்கள் மனம் நொந்துபோயிருக்கிறார்கள். அவர்களும், மீதம் இருக்கும் புத்தகத்தைக் காப்பாற்றிவிடலாம் என்கிற முயற்சியில் எம்.எல்.ஏ.... அமைச்சர்... அதிகாரிகளிடம் போய் நிலைமையை விளக்கியிருக்கிறார்கள். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை என்பதுதான் அவர்களுடைய வருத்தம்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் யூனியனுக்கு உட்பட்டது பணங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே கிராமப்புற நூலகம் அமைக்கப்பட்டது. இக்கிராமம் திருத்திப்பட்டி, புலவன்பட்டி, சூரம்பட்டி, பணங்குடி, காந்தி நகர் காலனி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து ஆகும். உயர்நிலைப் பள்ளி ஒன்று, நடுநிலைப் பள்ளி இரண்டு, ஆரம்பப் பள்ளி ஒன்று இதுதவிர ஏர்டெல் கம்யூனிகேசன் நடத்தும் பள்ளி ஒன்று என இவை அனைத்தும் இந்த ஊரிலேயே இயங்கிவருகின்றன. இங்குள்ள கிராமப்புற நூலகத்தில் பதினைந்தாயிரம் புத்தகங்கள் இருந்தன. ஆனால், தற்போது அவ்வளவு புத்தகங்கள் அங்கு இல்லை. 

 

நூலகம்


புத்தகத்தின் மதிப்பை உணர்ந்த அந்த ஊர் இளைஞர்களில் ஒருவரான அருள் ஆனந்தன், ''எங்கள் ஊரில் இருக்கும் கிராமப்புற நூலகத்தில் கல்வி, அறிவியல், விவசாயம், சட்டம் மற்றும் விஞ்ஞானம் வரைக்கும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அனைத்து வகையான புத்தகங்களும் இருக்கின்றன. இங்கே இருக்குற பள்ளி மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என எல்லோருக்கும் இந்த நூலகம் அறிவைத் தரக்கூடிய கோயில். நாற்பது வருடங்களுக்கு மேலான நூலகம் என்பதால் கட்டடம் இடிந்தும் மழை நீர் ஒழுகியும் புத்தகங்கள் அனைத்தும் நனைந்து கறையான் பிடித்து படிக்க முடியாதபடி சிதைந்துபோயுள்ளன. புத்தகங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டி கல்லல் பி.டி.ஓ ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தோம். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. கிராமப்புற நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பாதுகாக்க முடியாத அதிகாரிகள், அண்ணா நூலகம் ஒன்றை நாற்பது லட்சம் ரூபாய் செலவில் எங்கள் ஊரிலேயே சொற்ப அளவிலான புத்தகங்களைவைத்து திறந்திருக்கிறார்கள்.

'இந்த நூலகத்திலாவது கிராமப்புற நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாற்றி வையுங்கள்' என்று மன்றாடினோம். எந்த அதிகாரியும் புத்தகத்தின் மகிமையை அறியாதவர்களாகவே நடந்துகொள்கிறார்கள். உலகத்தில், வாழ்வில் உயர்ந்த அறிஞர்கள் மன்னர்கள் எல்லாருமே புத்தகத்தைப் படித்து வளர்ந்தவர்கள்தான். எங்கள் ஊரிலும் எங்கள் பஞ்சாயத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ளவர்கள் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துப் படித்துத்தான் அரசாங்க வேலைக்குப் போயுள்ளனர். இந்த நூலகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்றச் சொல்லி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்போடச் சொன்னோம். அதைகூட மறுத்துவிட்டனர் ஊராட்சி மன்றத் தலைவர்கள். இந்த நிலையில்தான், இளைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எப்படியாவது அந்த நூலகத்தில் மீதம் இருக்கும் புத்தகங்களைப் பாதுகாக்கச் சபதமெடுத்திருக்கிறோம்'' என்றார்..

புத்தகம்
இதுகுறித்து அந்த இளைஞர்களிடம் பேசினோம். ''இந்தியாவில் முதன்முதலாகப் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்டு நூல்கள் செம்மைப்படுத்தப்பட்டன. ஒருநூல், தனி ஒருவரிடம் இருந்தால்... அதனால் பயன் எதுவுமில்லை. பழுத்த மரம் பலருக்கும் பயன்தரும் என்பதுபோல பொது நூலகத்தில் அந்த நூல் இருந்தால்தான் அனைவருக்கும் பயன்தரும். நூலகப் பயன்பாட்டுக்கான விதிகளை உருவாக்கி தந்த சீர்காழி சீ.ரா.அரங்கநாதன் இன்றைக்கும் இந்திய நூலகத் தந்தையாகப் போற்றப்படுகிறார். பழங்கால மக்கள் தங்களுடைய கருத்துகளை, எண்ணங்களை வெளிப்படுத்த கற்பாறைகள், பலகைகள், தோல் துணிகள், ஓலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தினர். தமிழக மக்களைப் பொறுத்தவரை பனை ஓலைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனை ஓலை மூலம் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பெட்டியில் வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருக்கும் ஓலைச்சுவடிகளைக் கறையான் அரிக்காமல் இருப்பதற்காகத் துளசி, வேப்பிலை போன்றவற்றைப் போட்டுப் பாதுகாப்பார்கள். அதன் பிறகு மஞ்சள் நீரில் நனைத்தும் ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வந்தனர். இலக்கியத்தின் மாபெரும் புரட்சி என்றால் அது காகித கண்டுபிடிப்புதான். அந்தக் காலத்தில் நூலகத்தின் பயன்பாடு குறைவாகவே இருந்தது. அரண்மனை, மாளிகை மடம், கோயில்கள் முதலியவற்றில் நூல்கள் படிப்பதற்காக இருந்தன. சிலர், பெருமைக்காவே வீடுகளில் புத்தகங்களை அடுக்கிவைத்திருந்தனர். இந்நிலை மாறி புத்தகங்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தழைத்தோங்கியது. இதன் விளைவாகத்தான் நூலகங்கள் உருவாகின. அதனால்தான் நாங்களும் இந்த நூலகத்தைப் பாதுகாக்கப் போராடிவருகிறோம்'' என்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement