’எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும்!’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

dinakaran

ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும், அவருக்கு அளித்துவந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொள்வதாகவும் மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் 'பீச் ரிசார்ட்டில்' தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான்காவது நாளான இன்று புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ‘தி சன் வே மேனர்’ தனியார் விடுதிக்கு 18 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் முகாமை மாற்றியிருக்கின்றனர்.

அதன்படி இன்று 12.50 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கார்களில் சன் வே ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான முதலியார்பேட்டைத் தொகுதியின் எம்.எல்.ஏ பாஸ்கரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இவர் தினகரன் அணியிலிருந்து எடப்பாடி அணிக்குத் தாவி மீண்டும் தினகரன் அணிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலுக்கு வந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் வாரவிடுமுறை காரணமாக அறைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதனால்தான் இங்கு தங்க வந்திருக்கிறோம் என்றவரிடம், புதுச்சேரிக்கு வந்து நான்கு நாள்களாகியும் உங்கள் தரப்பின் எண்ணிக்க உயரவில்லையே என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ''எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர் என்பதை நிரூபிப்போம். பல எம்.எல்.ஏ-க்கள் மனதளவில் எங்களோடு இருக்கின்றனர். விரைவில் அது வெளிப்படும்” என்றார்.

thangathamizhchelvan

 

தொடர்ந்து பேசிய செந்தில்பாலாஜி, ''எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட கட்சியைக் கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்றவரிடம், மூன்று நாள்களாகியும் தினகரன் புதுச்சேரிக்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, “தினகரன் வருவதாக உங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல் தவறு. அவர் வருவதாக இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றார்.

senthil balaji
 

தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “முதலில் எங்களுக்கு நோட்டீஸ் வரட்டும். அதன் பின்னர், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு உரிய பதில் அளிப்போம்” என்றார். அதேபோல உங்கள் தொகுதியில் உங்களைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்களே என்று கேட்டதற்கு, “எனக்கு வேண்டாதவர்களால் பரப்பப்படும் செய்தி அது. இரண்டு முறை நான் கரூர் தொகுதியிலும், ஒரு முறை அரவக்குறிச்சி தொகுதியிலும் எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். சட்டமன்றத்தில் வாதாடி, மக்களுக்கு அடிப்படை பணிகளைச் செய்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!