முதலில் துணை முதல்வர், அடுத்து முதல்வர்..! அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலில் சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், பின்னர் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அடுத்தடுத்து அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகள் இணைந்ததையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவைப் வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதன் பின்னர் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கினர். சில நாள்கள் ரிசார்ட்டில் இருந்த அவர்கள் இன்று அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர்.

இந்த நிலையில், 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன்  நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்பதற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். ஆட்சியைத் தக்கவைக்க முதல்வர் பழனிசாமி இந்த வியூகத்தை வகுத்திருந்தாலும் ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் 19 எம்.எல்.ஏ-க்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளராகக் கருத்தப்பட்ட சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ''பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் அணிகள் ஒன்றாக இணைய வேண்டும். பன்னீர்செல்வத்தை அழைத்ததுபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் அழைத்துப் பேச வேண்டும். பிளவுகள் நீடித்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கலாம்; மக்கள் முடிவு செய்யட்டும்" என்று அதிரடியாகக் கூறினார்.

இதனிடையே, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, பொன்னையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த ஆலோசனை சில நிமிடங்கள் நீடித்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை அவரது வீட்டில் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அடுத்தடுத்து அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை தினகரன் அதிரடியாக மாற்றி வருகிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!