தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டைகள்! - அதிர்ச்சியில் போலீஸ்

இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பார்சல்கள்

இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்குமிடையேயான போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாட்டில் இருந்து வந்தபோது வங்கக்கடலில் பாக் நீரினை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு படைகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். போர் முடிவுக்கு வந்த பின், இந்தக் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா, போதை மாத்திரைகள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடத்துவது அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக்குக் கடத்திச் செல்ல முயன்ற பீடி இலை பண்டல்கள் பாம்பன் அருகே உள்ள குந்துகால் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கின. இந்நிலையில் இன்று தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரைப் பகுதியில் 7 சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி கிடப்பதாக தனுஷ்கோடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று கரை ஒதுங்கிய மூட்டைகளைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் தலா 2 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 140 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றிய போலீஸார் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வெயிலில் காய வைத்துள்ளனர்.

மேலும் தனுஷ்கோடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள், ஶ்ரீராம், சரண்யா ஆகியோர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா மூட்டைகளைக் கடத்திச் செல்லும்போது படகுக் கவிழ்ந்ததால் அவை கடலில் விழுந்ததா அல்லது கடற்படையினர் ரோந்தின்போது சிக்கிக் கொள்ளாமல் இருக்கக் கடத்தல்காரர்களே கஞ்சா மூட்டைகளைக் கடலில் போட்டனரா எனத் தெரியாத நிலையில், தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நடந்துவரும் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களால் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் அப்பாவி மீனவர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாக மாறி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!