Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அவரின் சிவந்த கண்களுக்குப் பின்னால்...' - விஜயகாந்த் பிறந்தநாள் பகிர்வு

                                        vijayakanth, விஜயகாந்த் Pic Credits : ஜீவானந்தன்

சிவந்த கண்களுக்குச் சொந்தக்காரரான விஜயகாந்தின் இன்னொரு பக்கம் அவருக்கானது. அவரது பெர்சனல் பக்கங்களைத் திருப்பினால், பல இடங்களில் அவரது நண்பர்களே நிறைந்திருக்கிறார்கள். நட்பதிகாரத்துக்குத் திருக்குறளை மனனம் செய்யாமலேயே எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார் விஜயகாந்த். மதுரை ரைஸ் மில் முதல் சட்டப்பேரவை வரை அவர் ஆடிய ஆடு-புலி ஆட்டம் ஒரு ரியல் சினிமா. இன்று 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜயகாந்த் பற்றிய சில தகவல்கள் இவை... 

விஜயகாந்துக்கு நண்பர்கள்தான் ஃபர்ஸ்ட். மதுரையில் தன்னுடன் வளர்ந்த நட்புகளை இப்போதும் தொடர்பில் வைத்திருக்கிறார். அமெரிக்கன் கல்லூரி அருகே நண்பர்களுடன் இவர் செய்யும் அலப்பறைகள் ஏகம். விஜயகாந்தின் ‘ஜிஞ்சர் பவுடர்’ டெக்னிக்குகள் பற்றி அவரது நெருங்கிய வட்டாரங்களைக் கேட்டால் குஷியாகச் சொல்வார்கள். இளம்வயதில் மதுரை ‘சென்ட்ரல்’ தியேட்டரில் படம் பார்ப்பது என்றால், கொள்ளைப் பிரியம். மதுரை, திருமங்கலம் அருகே இருக்கிறது இவரது குலதெய்வமான ‘வீரசின்னம்மா’ கோயில். இவரது அப்பா அழகர், காங்கிரஸின் அப்போதைய மதுரை மாவட்ட நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவர்.

விஜயகாந்த், vijayakanth

மறைந்த தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் தொடக்கம் முதலே நெருங்கிய நண்பர்கள். சென்னையில் லிபர்ட்டி அருகே இருந்த லாட்ஜ், பாண்டிபஜார் ரோகிணி லாட்ஜ் என விடியவிடிய இவர்களின் அரட்டைக் கச்சேரி நடக்கும். ஜாலியாக அடிதடியில் ஈடுபடும் அளவுக்கு இவர்கள் நண்பர்கள். விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரனை’ தயாரித்தது ராவுத்தர்தான். அதில், 40 நாள்களுக்கு மேல் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து அமர்களப்படுத்தினாராம். ஒருகட்டத்தில், இவர்களது நட்பிலும் விரிசல் விழுந்தது. இறுதியில், அ.தி.மு.க-வில் இருந்த ராவுத்தரிடம், விஜயகாந்தை விமர்சித்து பேசச்சொல்லி பலர் வற்புறுத்துவார்களாம். ஆனால், கடைசிவரை விஜயகாந்தை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார் ராவுத்தர். இப்தார் நிகழ்ச்சியின்போதுகூட, ‘உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் என் நண்பனுக்கு துவா செய்யுங்கள்’ என்றிருக்கிறார் விஜயகாந்த். மரணப்படுக்கையில் இருந்த ராவுத்தரைக் காப்பாற்றச் சிங்கப்பூரில் தனக்குச் சிகிச்சையளித்த மருத்துவரை அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதற்குள் உயிரிழந்துவிட்டார் ராவுத்தர்.

பழம்பெரும் மலையாள இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் நடிகர்கள் மது, சத்யன் நடித்த படம், ‘கரை காணா கடல்’. விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இது. இப்படத்தின் பாடல்களை முணுமுணுக்கும்போது ‘வேற லெவல்’ விஜயகாந்தைப் பார்க்க முடியும். தனது உச்ச நேரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு கடும் போட்டியாக இருந்திருக்கிறார் விஜயகாந்த். ஆக்‌ஷனில் கலக்கும் இவரின் படங்கள் ‘சி’ சென்டரில் சக்கைப்போடு போடும். 1979-ல் வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். விஜயராஜ் என்ற இவரது பெயரை ‘விஜயகாந்த்’ என மாற்றியவர் இயக்குநர் எம்.ஏ.காஜா.  

விஜயகாந்த், vijayakanth

தி.மு.க தலைவர் கருணாநிதி மீதும் மறைந்த த.மா.கா. தலைவர் மூப்பனார் மீதும் பாசம் அதிகம். மூப்பனார் பிறந்தநாளுக்கு காலையிலேயே அவரது மைலாப்பூர் வீட்டுக்குப் போய்விடுவார் விஜயகாந்த். மூப்பனாரும் இவரைச் சொந்த மகன்போல விபூதி பூசி வாழ்த்துவார். பின்னர், குடும்பத்துடன் உட்கார்ந்து உணவை முடித்ததும், வீட்டு வாசல்வரை வந்து விஜயகாந்தை வழியனுப்பி வைப்பாராம் மூப்பனார். அவரது மகன் ஜி.கே.வாசன் மீது ‘சின்ன அய்யா’ என மரியாதை கலந்த அக்கறையை இப்போதும் காட்டுவார் விஜயகாந்த். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் கருணாநிதி பற்றி விசாரித்துக்கொண்டே இருக்கிறார் விஜயகாந்த். ஒரு பாராட்டு விழாவில், தங்க பேனாவைப் பரிசளித்து கருணாநிதிக்கே ஷாக் கொடுத்திருக்கிறார். 

உணவுகளில் முட்டை ஆப் பாயில், மீன் வகைகள் என்றால் ஒரு பிடிபிடித்துவிடுவார். நண்பர்களுடன் போட்டி போட்டு 25 ஆப் பாயில்களைச் சாப்பிட்டு அசத்துவார். திடீர், திடீரென நண்பர்கள் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விஜயகாந்த், அவர்கள் வீட்டில் இருக்கும் உணவுகளை யாரிடமும் கேட்காமல் உரிமையுடன் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார். நண்பர்களின் குழந்தைகளுடன் குதூகலிக்கும் விஜயகாந்தை அவர்களின் நண்பர்களே இப்போது மிஸ் செய்கின்றனர். 

vijayakanth, விஜயகாந்த்

விஜயகாந்துக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தபோது, அவரது நண்பர் திருப்பதி என்பவர் மதுரையிலேயே மிகப் பிரமாண்ட மண்டபத்தைத் தனது பெயரில் புக் செய்திருந்தார். விஜயகாந்துக்குத்தான் திருமணம் என்பது மண்டப நிர்வாகத்துக்குத் தெரியவந்ததும், ‘திருமணத்தை வேறு இடத்தில் நடத்திக்கொள்ளுங்கள். எங்கள் அரங்கத்தைத் தரமாட்டோம்’ என மறுத்துவிட்டார்களாம். கருணாநிதி, மூப்பனார் என வி.வி.ஐ.பி-க்கள் பங்கேற்கிறார்கள் எனச் சொல்லியும் மண்டப நிர்வாகத்தினர் ஏற்கவில்லை. இதை விஜயகாந்துக்குத் தெரியப்படுத்தியதும், அவர் எந்தவித கோபத்தையுமே காட்டிக்கொள்ளாமல், 'மண்பத்தை மாற்றிக்கொள்ளலாம்' எனக் கூலாகச் சொல்லிவிட்டாராம். ஆனால், உடனடியாக தென் மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு அதே மண்டபத்தில் விஜயகாந்தின் திருமணத்தை நடத்திக்காட்டினார். திருமணத்தின்போது தமுக்கம் மைதானத்தில் பொதுமக்கள் பலருக்கும் விருந்து. ஓப்பன் ஜீப்பில் மனைவி பிரேமலதாவுடன் அங்குவந்து மதுரை மக்களின் வாழ்த்துகளையும் வாங்கிக்கொண்டார் விஜயகாந்த்.  

விஜயகாந்த், vijayakanth

சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோரிடம் நல்ல நட்பை இப்போதும் தொடர்கிறார். சத்யராஜ், பிரபு ஆகியோர் விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கம். ஷூட்டிங் சமயங்களில் ஒரே அறையில் இவர்கள் சந்தித்து நீண்ட நேரம் பொழுதுபோக்குவார்கள். நடிகர்கள் செந்தில், தியாகு, மன்சூர்அலிகான் ஆகியோரும் விஜயகாந்தின் நெருங்கிய வட்டாரத்தில் வலம் வந்தவர்கள். விஜயகாந்தின் பிறந்தநாளின்போது, தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருந்த அவரது அலுவலகத்துக்கு நேரில் வந்து வாழ்த்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 

களத்தில் இறங்கி வேலை செய்வதில் முன்னால் வந்து நிற்பாராம் விஜயகாந்த். ஒருமுறை மதுரையில் நட்சத்திர விழாவை முடித்துவிட்டு நடிகர்கள் ரயில்மூலம் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, உள்ளிருந்த யாருக்கும் இரவு உணவு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அப்போது, நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் இந்த விஷயத்தைத் தயங்கி, தயங்கிச் சொல்லியிருக்கிறார்கள். கட்டியிருந்த லுங்கியுடன் நடுஇரவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவர், அனைவருக்குமான உணவுப் பொட்டலங்களுடன் திரும்பி வந்தாராம். இதைப் பலநேரங்களில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் நடிகர் சத்யராஜ்.  

vijayakanth, விஜயகாந்த்

பல எதிர்மறை கருத்துகள் விஜயகாந்த்மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 2006-ல் ஒரேயொரு இடத்தில் வென்ற விஜயகாந்த்தான், 2011-ல் எதிர்க்கட்சித் தலைவர். இந்த கிராஃப்தான், அவரது எதிரிகளுக்கு அவர் தந்த விடை. ‘கூடை’ சின்னத்தில் வேறொருவரை நிற்கவைத்து விஜயகாந்தைக் கவிழ்த்த கதை பலர் அறியாதது. அவரைத் தூக்கி அடித்த பலர் அவரது வீட்டு வாசலில் போய்நின்றார்கள். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தலைப்புச் செய்தியானார். கொண்டாடித் தீர்க்கப்படும் ஒருவரைச் சுத்தமாகத் தீர்த்துக்கட்டுவது தமிழக அரசியல் களத்துக்குப் புதிதல்ல... அதையும் நேருக்கு நேர் சந்தித்துவிட்டார். சினிமா வாழ்க்கையைவிட, அரசியல் வாழ்க்கை அவருக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது. இந்தப் பிறந்தநாள், அவருக்குமுன் பல சவால்களை வைத்திருக்கிறது. நீங்களாவது ‘போருக்கு’ முன் தயாராகுங்கள் விஜயகாந்த்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement