வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (25/08/2017)

கடைசி தொடர்பு:16:40 (25/08/2017)

'அவர் எதிரணி அல்ல... எதிரி!’ - எடப்பாடியை விளாசும் தினகரன் தரப்பு

”எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதால் அவரை மாற்ற சொல்லி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். முதலமைச்சர் பதவியிலிருந்து அவரை பதவி நீக்கம் செய்துவிட்டால் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும்” என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னால் முதல்வர் ஓபிஎஸ் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து நான்காவது நாளான இன்று புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ‘தி சன் வே மேனர்’ தனியார் விடுதிக்கு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் முகாமை மாற்றியிருக்கின்றனர்.

அந்த எம்.எல்.ஏக்களை சந்திக்க வந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, “கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் இங்கு  தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை வந்து இன்று சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு எதிர் அணி அல்ல. அவர் எங்களுடைய எதிரி. அவர் ஊழல் செய்துள்ளதால் அவரை மாற்ற சொல்லி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.
 

முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை பதவி நீக்கம் செய்துவிட்டால் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும். எடப்பாடி பழனிச்சாமிக்கு மெஜாரிட்டி இல்லை. அதனால் எங்களது கோரிக்கைகளுக்கு இணங்கியும், பொறுப்பை உணர்ந்தும் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. தமிழகத்தின் சபாநாயகர் சட்டம் தெரியாமல் செயல்படுகிறார். எங்கள் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை மிரட்டுவதற்காகவே சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். பன்னீர்செல்வம் அணியினரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க