'உதயச்சந்திரனை இப்படித்தான் பழி வாங்குவதா?' - கொந்தளிக்கும் கல்வியாளர்கள்

’பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதவியிலிருந்து உதயச்சந்திரன் கீழிறக்கப்பட்டது முற்றிலும் நியாயமற்ற செயல்’ என்கின்றனர் தமிழகக் கல்வியாளர்கள்.

உதயச்சந்திரன்


பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கும் மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு. நீதிமன்றம் தடை உத்தரவு காரணமாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாடத்திட்டங்கள் தயாரிப்புக் குழுவில் மட்டுமே பணியை மட்டும் ஒதுக்கி இருக்கிறது தமிழக அரசு. இதன்மூலம் இனிவரும் காலங்களில் உதயச்சந்திரன் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். கீழ் செயல்பட வேண்டும்.

கடந்த சில வாரங்களாக அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உதயச்சந்திரனுக்குமிடையில் பனிப்போர் நிலவிவருவதாகக் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறைக்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் கல்வித்துறை அதிகாரிகள். மேலும், இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உதயச்சந்திரன் முற்றிலும் கல்வித்துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கான காரணம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயச்சந்திரனைப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் வரை, மாற்றி அமைக்கக் கூடாது என்று மாற்றத்துக்குத் தடை விதித்தது. இதனாலே அவர் பள்ளிக் கல்வித்துறையிலிருந்து கீழிறக்கப்பட்டு பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கான குழுவில் மட்டும் செயலாளராக மாற்றி இருக்கிறது தமிழக அரசு’ என்றார்.

தமிழக அரசின் இந்தப் பதவி மாற்றம் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், ‘கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அத்துறையில் புதிய திட்டங்கள் கொண்டுவந்து அவற்றை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படும். ஆனால், கல்வித்துறையில் புதிய நல்ல மாற்றங்கள் செயல்படத் தொடங்கும் முன்னரே இதுபோல் செயலாளரை மாற்றியிருப்பது முற்றிலும் நியாயமற்றது. ஒரு துறைக்கு இரண்டு செயலாளர்கள் என்பது தேவையற்றது. ஒரே துறைக்கு இரண்டு செயலாளர்களை நியமித்து அவர்களுக்கு இந்த அரசு சம்பளம் தரும். ஆனால், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காது. அரசு தன்னுடைய தற்பெருமைக்காவே இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுவருகிறது. உதயச்சந்திரனை மாற்றியிருப்பதால் கல்வித்துறை வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களின் நோக்கத்தின் வேகம் குறையும்’ என்றார் வேதனையுடன்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!